தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தொழில்துறையில் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி வேகமாக வீறு நடைபோடத் தொடங்கிவிட்டது. இந்த நோக்கத்துக்கு வலுசேர்க்கும் விதமாக தனது தேர்தல் அறிக்கையைக்கூட "வெற்றித் தமிழ்நாடு" என்று தலைப்பிட்டு, அதில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல வாக்குறுதிகளை விஜய் கொடுத்திருந்தார்.
அதில் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்பதை எதிர்பார்த்து பல தொலைநோக்கு திட்டங்களை அறிவித்திருந்தார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், பொள்ளாச்சி, கரூர், கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், சிவகாசி உள்ளிட்ட 25 நகரங்களில் மைக்ரோ டெக் பார்க் என்ற குறு தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம், அந்தந்த நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே இருந்து உலகளவில் பணியாற்றும் வாய்ப்பை மைக்ரோ தொழிற்பூங்காக்கள் உருவாக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுதவிர புதிதாக தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலைகளையும் அவர் அறிவித்திருந்தார். அந்தவகையில், முதல் ஒப்பந்தமே இந்தியாவில் பல துறைகளில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் எல் அண்டு டி நிறுவனம், தமிழ்நாட்டில் ரூ.18,600 கோடி முதலீட்டில் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்திட்டது.
இதன்மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டேட்டா சென்டர் என்று கூறப்படும் தகவல் தரவு மைய விரிவாக்க திட்டமும், கோவையில் ரூ.2,500 கோடி முதலீட்டில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு பொருட்கள் மற்றும் மின்னணு அமைப்புகள் உற்பத்தி திட்டமும், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.1,100 கோடி முதலீட்டில் 5,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் காட்டுப்பள்ளி எல் அண்டு டி கப்பல் கட்டும் தளத் திட்டமும் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இதுபோல தூத்துக்குடியில் ரூ.38 ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அதிநவீன கப்பல் கட்டும் தளம் ஹூண்டாய் நிறுவனத்தால் நிறுவப்பட உள்ளது. இதுமட்டுமல்லாமல் அமைச்சரவை கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய், அனைத்து துறைகளும் நிறைவேற்றவேண்டிய மொத்தம் 436 திட்டங்களை அமைச்சர்களிடம் பட்டியலிட்டு கொடுத்து, அதற்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த செயல்திட்டங்கள் எல்லாம் 2036-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக (சுமார் ரூ.142 லட்சம் கோடி) உயர்த்தி அவரது லட்சிய இலக்கை அடைவதற்கான மைல்கற்களாகவே அமைந்துள்ளன. அரசு இதுபோன்று முயற்சிகளை எடுத்துக்கொண்டிருந்தாலும், ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டை தனது மின்சார வாகன உற்பத்தியின் கேந்திரமாக ஆக்க உறுதிபூண்டுள்ளது. 2032-க்குள் இந்தியாவில் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள இந்த நிறுவனம், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.26 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
இது தமிழ்நாட்டின் மீது அந்த நிறுவனத்துக்கு உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையை காட்டுகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஹூண்டாய் நிறுவனம், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உலகளாவிய வேலைத்திறனை மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் வழங்க முடிவெடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் செயல்பாடு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது. ஆக மொத்தத்தில் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் வேகமாக பீடு நடைபோட தொடங்கிவிட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கான நம்பிக்கை பிரகாசமாக தெரிய தொடங்கியிருக்கிறது.