1967-ம் ஆண்டு வரை அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களை பெருமளவில் தி.மு.க. களத்தில் இறக்கியது. எதிர்ப்பு தீ பரவியதால் அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து, தி.மு.க. முடிசூடியது. அப்போது முதல் 2026-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியாமல், தி.மு.க.-அ.தி.மு.க. என்று திராவிட கட்சிகளே மாறிமாறி ஆட்சிக்கு வந்தன.
அதன்பிறகு த.வெ.க. ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணம் 'ஜென் சி' இளைஞர்களும், மாணவர்களும்தான். இதுபோலத்தான் அசாமில் கடந்த 1985-ம் ஆண்டு அசாம் ஒப்பந்தத்தை நிறைவேற்றவேண்டும் என்று மாணவர்கள் நடத்திய பெரிய போராட்டம் மாணவர் சங்கங்களை அசாம் கன பரிஷத் என்ற அரசியல் கட்சியாக மாற்றியதோடு, அதன் தலைவர் பிரபுல்லா குமார் தலைமையில் இரண்டு முறை ஆட்சிக்கட்டிலிலும் அமர்ந்தது.
இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு 'மீம்ஸ்' மூலம் உருவான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் 12 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபையில் அங்கம் வகித்த கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவியை துறக்க நேரிட்டது. இதோடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு அரசியலில் இடம் இல்லை என்று அனைவரும் நினைத்த நேரத்தில், அதன் தலைவரான அபிஜித் தீப்கேயும். மற்ற இளம் தலைவர்களும் விடுவதாக இல்லை. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டம் நாடு முழுவதும் மாணவர்களை போராட்டக்களத்தில் குதிக்க வைத்துவிட்டது. அவர்களுக்கு ஒரு ஆயுதமாக நீட் தேர்வு கையில் கிடைத்துவிட்டது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கைகளில் ஒன்றான தர்மேந்திர பிரதான் ராஜினாமா என்பது நிறைவேறிவிட்டது. இப்போது மற்ற கோரிக்கைகளை கையில் எடுத்து விட்டார்கள்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அபிஜித் தீப்கேயின் வீட்டில் 2 நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்தில், மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உள்ள பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள், குறைகளை அறிவதற்காக 'பொதுமக்களே என்ன சொல்கிறீர்கள்' என்ற பிரசாரத்தை செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர். ஆட்சியில் உள்ளவர்கள் இதையெல்லாம் கேட்க விருப்பம் இல்லாதவர்களாக இருப்பதால் தொடர்பில்லாமல் போய்விட்டார்கள் என்று அறிவித்த அவர்கள், மக்களின் விருப்பங்கள், குறைகள், எதிர்பார்ப்புகளை அறிவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அபிஜித் தீப்கே கூறுகையில், 'கல்விதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முன்னுரிமை. வேலையில்லா திண்டாட்டத்தை நாட்டின் முக்கிய பொது மற்றும் அரசியல் விவகாரமாக கையில் எடுக்கப்போகிறோம். இதை இன்னும் புறக்கணித்தால் 'ஜென் சி' இளைஞர்கள் இதை கையில் எடுத்துக்கொண்டு வீதிக்கு வந்துவிடுவார்கள் என்று எச்சரித்தார். ஆக இளைஞர்களின் உயிர்மூச்சான இந்த இரண்டு பிரச்சினைகளுக்காக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட தயாராகிவிட்டது. ஆக ஒரு வலுவான கட்சி உதயமாகிவிட்டது.
பா.ஜனதாவுக்கு எதிராக நிற்கும் மற்ற கட்சிகள் பலமில்லாததாக நிற்கும் நிலையில், எந்த அரசியல் கலப்பும் இல்லாமல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி களத்தில் குதிக்க தயாராகிவிட்டது.