தலையங்கம்

அதிகரித்து வரும் மின்சார தேவை

மின்சாரத் தேவை மாதந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சென்னை,

மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்பதுதான் தற்போதைய யதார்த்த நிலையாகும். அதனால்தான் மின் தடை ஏற்படும்போதெல்லாம் மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது. தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் உருவாகி வருவதாலும், வீடுகளுக்கும், விவசாயத்துக்கும் புதிய இணைப்புகள் கொடுக்கப்பட்டு வருவதாலும் மின்சாரத் தேவை மாதந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் மின்சாரப் பயன்பாடு 6 சதவீதம் உயர்ந்து கொண்டே இருந்த நிலையில், இந்தாண்டு மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கோடை காலத்தில் மட்டும் 10 சதவீதம் மின் தேவை உயர்ந்திருந்தது. கோடை வெயிலில் பல வீடுகளில் மின்விசிறி மற்றும் ஏர்கண்டிஷன் ஓய்வின்றி இயங்கியதுதான் இதற்கு காரணம் ஆகும்.

இதையெல்லாம்விட கடந்த ஜூலை மாதம் மட்டும் 2025-ம் ஆண்டு ஜூலை மாதத்தை விட 13 சதவீதம் மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சபட்சமாக 17,500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சபட்சமாக 21,400 மெகாவாட் பயன்பாட்டுக்கான தேவை இருந்தது. தமிழ்நாட்டில் தேவை அதிகரித்துக்கொண்டு இருப்பதால் அரசும் மின்சார உற்பத்தியை பெருக்க புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. நமது மக்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாத நிலையில், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.

நீர் மின்நிலையங்களை பொறுத்தமட்டில் இப்போது இருக்கும் நிலையங்களை தவிர இனி மேலும் நீர் மின்நிலையங்களை தொடங்க வாய்ப்பு இல்லை. எனவே நிலக்கரியை பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களை தொடங்கினால்தான் மின் உற்பத்தியை பெருக்கமுடியும். தமிழ்நாட்டில் மின்வாரியத்துக்கு சொந்தமான 6 அனல் மின்நிலையங்கள் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 2017-ம் ஆண்டு ரூ.13,076 கோடியில் தலா 660 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரு பிரிவுகள் கொண்ட அனல் மின்நிலையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த பணிகள் தாமதம் அடைந்தன. கடந்த ஆண்டு இதற்கான பணிகள் நிறைவுபெற்று அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து 72 மணி நேரம் சோதனை ஓட்டம் நடந்து முடிந்து சமீபத்தில் உடன்குடி அனல் மின்நிலையத்தில் முதல் பிரிவில் 660 மெகாவாட் மின்சார உற்பத்தி தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு கோடைகாலத்துக்கு முன்பு 2-வது பிரிவிலும் மேலும் 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கிவிடும் என்று தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக நிர்வாக இயக்குனர் கோவிந்தராவ் கூறினார்.

இதுமட்டுமல்லாமல் சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் தற்போதுள்ள 5,210 மெகாவாட் மின் நிலைய பிரிவுகளை மாற்றியமைத்து தூத்துக்குடி அனல் மின்நிலைய வளாகத்தில் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் தலா 800 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகளுடன் அதாவது பிரிவுகளுடன் மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட அதிதிறன் அனல் மின்நிலையம் நிறுவப்படும் என்று அறிவித்திருக்கிறார். இது இருளை விரட்டி ஒளியை பாய்ச்சியிருக்கிறது. ஒரு பக்கம் மின்சாரத் தேவை அதிகரித்து வந்தாலும், மறுபக்கம் மின்சார வாரியம் எடுத்து வரும் நடவடிக்கைகளால் மின்சார தட்டுப்பாடு இல்லாமல் சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

SCROLL FOR NEXT