ராணுவத்தில் அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நல்ல பயிற்சிகளையும், அனுபவமும் பெற்ற வீரர்கள் இந்திய ராணுவத்துக்கு கிடைக்கிறார்கள்.
ஜென்-சி இளைஞர்களின் போராட்டம் மத்திய அரசை பல முடிவுகளை எடுக்க வைத்துவிட்டது. 4 ஆண்டுகள் பணி முடிந்துவிட்டது. இனி நமக்கு ஓய்வுகாலம், வீட்டுக்கு கிளம்பலாம்' என்று தயாராகிக்கொண்டிருந்த அக்னி வீரர்களுக்கு தொடர்ந்து ராணுவத்தில். அவர்கள் பணியாற்றிய படையிலேயே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய ராணுவத்தில் மொத்தம் 12 லட்சம் வீரர்களும், அதிகாரிகளும் நாட்டை காக்கும் பணியில் இருக்கிறார்கள். 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் இருந்தபோது ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டு மத்தியில், அதாவது 2 ஆண்டுகளில் ராணுவத்தில் பதவியில் இருந்தவர்கள் மட்டும் தொடர்ந்து ஓய்வு பெற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆட்சேர்ப்பு நடக்காததால், 12 லட்சம் பணியிடத்தில் 1.25 லட்சம் காலியாக இருந்தது.
அப்போது, ராணுவத்தில் இளைஞர்களை குறுகியகால அடிப்படையில் பணியமர்த்த அக்னிபாத் என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது. இந்த திட்டத்தின் கீழ், 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் ஆண்டுதோறும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
முப்படைகளிலும் இளம் ரத்தத்தை புகுத்தவேண்டும், பென்ஷன் செலவை குறைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால், ராணுவ வீரர்களின் சராசரி வயது 32-லிருந்து இப்போது 26 ஆக குறைந்துவிட்டது. அக்னிவீரர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு முதல் 6 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். அதன்பிறகு அவர்கள் முப்படைகளிலும் பணியாற்றவேண்டும். 4 ஆண்டுகள் முடிந்தவுடன், அவர்களில் 25 சதவீதம் பேர் தகுதியின் அடிப்படையில் ராணுவத்திலேயே நிரந்தர பணிக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
மீதம் உள்ள 75 சதவீதம் பேருக்கு பென்ஷன் இல்லாமல் ஓய்வு அளிக்கப்படும். அவர்களுக்கு சேவை நிதி என்ற பெயரில் வரியில்லாமல் ரூ.11.71 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக நடந்த இந்த தேர்வுகளினால், 3 லட்சம் பேர் முப்படைகளில் பணியாற்றுகிறார்கள். இதில் முதல் ஆண்டு தேர்வான 24 ஆயிரம் பேரில், 75 சதவீதத்தினர் 4 ஆண்டுகள் பணி முடித்து இந்த மாத இறுதியில் பணி ஓய்வுபெற தயாராக இருந்தனர்.
இந்தநிலையில், அவர்களுக்கு தீபாவளி பரிசாக மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் முடிந்தப்பிறகும் அவர்கள் ஓய்வுபெறவேண்டிய அவசியம் இல்லை. அவர்களில் ராணுவத்தில் நிரந்தர பணியில் சேரவேண்டும் என்று விரும்புகிறவர்கள், தகுதி அடிப்படையில் சேர்ந்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இப்படி திடீர் என்று 'யூ-டர்ன்' அடித்ததனால், இதுவரை அக்னி வீரர்களாக இருந்தவர்கள் நிரந்தர ராணுவ வீரர்களாகிவிடுவார்கள். இதன்மூலம் 6 ஆண்டுகள் நல்ல பயிற்சிகளையும், அனுபவமும் பெற்ற வீரர்கள் இந்திய ராணுவத்துக்கு கிடைக்கிறார்கள். பயிற்சி முடித்த அக்னிவீரர்களுக்கு கதவுகள்தான் மாறியிருக்கிறதே தவிர, வெளியே போகும் வழியல்ல.
ராணுவத்தில் அதிகம்பேர் பணியாற்றும் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. இந்த மாநிலங்களில் உள்ள ஜென்-சி இளைஞர்கள்தான் ராணுவ வேலைவாய்ப்பையும் விரும்புகிறார்கள், இப்போது அக்னி வீரர்களாகவும் இருக்கிறார்கள் என்பதால்தான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும். மத்திய அரசின் இந்த முடிவு ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்தான்.