தலையங்கம்

உயர்வையும், சரிவையும் சந்திக்கும் பொருளாதாரம்

இவ்வளவு காலம் கழித்து ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியது பல தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவின் பொருளாதார நிலையை மதிப்பிட்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரிசர்வ் வங்கியின் கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா இருக்கிறார். இந்த வங்கியின் நிதி கொள்கைக் குழு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 4 முறையாவது கூடி நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் இந்த குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கிறது. அந்தவகையில், கடந்த 7-ந்தேதி கூடி ஒரு மனதாக சில முடிவுகளை எடுத்துள்ளது. மிக முக்கியமாக ரெப்போ ரேட்டை 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தி 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு குறுகிய கால தேவைகளுக்காக வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இவ்வளவு காலம் கழித்து ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியது பல தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த உயர்வு மட்டுமல்ல, இனிவரும் கூட்டங்களிலும் ரெப்போ ரேட் விகிதம் உயர்த்தப்படும் இல்லையென்றால், இதே நிலை நீடிக்கும் என்ற அபாய சங்கையும் ரிசர்வ் வங்கி கவர்னர் ஊதிவிட்டார். வங்கிகள் இனிமேல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வாங்கும் கடனுக்கு கூடுதல் வட்டி கொடுக்கவேண்டியது இருக்கும். இதனால் வங்கிகள், தாங்கள் வழங்கும் வீட்டுக் கடன், தனிநபர் கடன், வாகன கடன் போன்ற பல கடன்களுக்கான வட்டியை உயர்த்திவிடும். எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் ஒருவர் 15 ஆண்டுகளில் திருப்பி செலுத்தும் வகையில் ரூ.1 கோடி கடன் வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மாத தவணையில் ஏற்கனவே செலுத்தும் தொகையோடு இனி ரூ.1,500 கூடுதலாக செலுத்தவேண்டியது இருக்கும். அப்படி கூடுதலாக பணம் செலுத்தவில்லையென்றால், கடனை திருப்பி செலுத்துவதற்கான மாத தவணைகள் அதிகரிக்கும். இது வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால், வங்கிகளில் புதிதாக டெபாசிட் செய்பவர்களுக்கு கிடைக்கும் வட்டித்தொகை சற்று உயரும். ரெப்போ ரேட் உயர்ந்ததற்கு முக்கிய காரணம் நுகர்வோர் பணவீக்கம் அதாவது விலைவாசி உயர்வுதான். பொதுவாக விலைவாசி உயர்வு 4 சதவீதத்துக்குள் இருப்பதே சாலச் சிறந்ததாகும். தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி கடந்த ஆகஸ்டு மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்தது. இதோடு விலைவாசி உயர்வு நிற்கப்போவதில்லை.

நடப்பு நிதி ஆண்டில் விலைவாசி உயர்வு 5.2 சதவீதமாக இருக்கக்கூடும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. எல்நினோ தாக்கத்தால் பருவமழை பொய்த்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச வர்த்தக நெருக்கடிகள், போர் பதற்றம் போன்ற அரசாங்கத்தின் கைகளை மீறிய காரணங்களால்தான் விலைவாசி உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் ஒரு நேர்மறையான தாக்கமாக நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று ஆகஸ்டு மாதத்தில் செய்த மதிப்பீடு. இப்போது 7.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இது பொருளாதார எழுச்சியாக கருதப்படுகிறது. அடுத்து பண்டிகை காலங்கள் வருவதால் விலைவாசி உயர்ந்திருந்தாலும், பொதுமக்கள் நுகர்வு அதிகரிக்கும் என்பதால் அதுவும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். மொத்தத்தில் நாணயத்தின் இருபக்கங்கள்போல நாட்டின் பொருளாதார நிலை உயர்வையும். சரிவையும் ஒரே நேரத்தில் சந்திக்கிறது.

SCROLL FOR NEXT