தலையங்கம்

தமிழ்நாட்டுக்கு கிடைத்த மேலும் ஒரு பெருமை

பொதுவாக ஐகோர்ட்டு நீதிபதிகள்தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள்.

சிவில், கிரிமினல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய தீர்வு கிடைக்கவேண்டும் என்பதற்காக நீதி தேவதையை நாடுகிறார்கள். சட்டத்தின் முன்பு ஏழை, பணக்காரன் மட்டுமின்றி, அதிகாரம் படைத்தவர்கள் என அனைவரும் சமமானவர்கள். சாதி, மதம், பணப்பலம், அரசியல் செல்வாக்கு, அதிகாரம் ஆகியவை நிரபராதிகளுக்கு வழங்குட நீதியை எந்தவிதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காகவும், இவர், அவர் என்று பாகுபாடு பார்க்காமல் நடுநிலையோடு நீதி வழங்கவேண்டும் என்பதற்காகவும் கண்களை துணியால் மறைத்திருக்கும் நீதி தேவதை, தராசு முள்போல எந்த பக்கமும் சாயாமல் தனது அதிகாரத்தை நிலை நாட்டிவருகிறாள். உச்சபட்ச அதிகாரம் கொண்ட டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் 32 நீதிபதிகள் இருந்தனர். இந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அவசர சட்டத்தை பிறப்பித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நீதிபதிகள் விக்ரம்நாத், ஜெ.கே.மகேஷ்வரி, பி.வி.நாகரத்தினா தமிழ்நாட்டை சேர்ந்த எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரை கொண்ட கொலிஜியம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் 4 பேரையும், சுப்ரீம் கோர்ட்டு பெண் சீனியர்வக்கீல் ஒருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது. அவர்களும் பதவியேற்றுள்ளனர்.

இந்த 5 நீதிபதிகளையும் சேர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆகியிருக்கிறது. இன்னும் ஒரு நீதிபதி பதவிதான் காலியாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் சீனியர் வக்கீலாக பணியாற்றிய தமிழகத்தை சேர்ந்த 60 வயதான வி.மோகனா நீதிபதியாக பதவியேற்றது நமக்கு கிடைத்த பெருமையாகும். இதற்குமுன்பு கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் 76 ஆண்டுகால வரலாற்றில் வி.மோகனாவையும் சேர்த்து 12 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக இருந்திருக்கின்றனர். தமிழக கவர்னராக இருந்த பாத்திமா பீவி தான் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாவார். இவர் 1989-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி பதவியேற்றார். தமிழ்நாட்டில் இருந்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பானுமதி இருந்திருக்கிறார். வி.மோகனா, நாகரத்தினா ஆகிய 2 பேர் மட்டுமே சுப்ரீம் கோர்ட்டில் தற்போது பெண் நீதிபதிகளாக உள்ளனர்.

பொதுவாக ஐகோர்ட்டு நீதிபதிகள்தான் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள். அதுபோல அரிதாக சிறந்த வக்கீல்கள் நியமிக்கப்படுவார்கள். அந்தவகையில், ஓய்வுபெற்ற நீதிபதியான இந்து மல்கோத்ராவுக்கு பிறகு, இரண்டாவது பெண் நீதிபதியாக வி.மோகனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகள் 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளநிலையில், 4-வது நீதிபதியாக வி.மோகனா அலங்கரிக்கிறார்.

கோவை சட்டக்கல்லூரியில் தொடங்கப்பட்ட 5 ஆண்டு சட்டப்படிப்பில் முதல் ஆண்டிலேயே சேர்ந்து சட்டப்படிப்பை 1988-ல் வி.மோகனா முடித்தார். வக்கீல் எம்.பஞ்சாபகேசனிடம் ஜூனியராக பயிற்சிப்பெற்று, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியான இந்து மல்கோத்ரா, சீனியர் வக்கீல் வைத்யநாதனுடன் பணிபுரிந்தார். 1996-க்கு பிறகு சுப்ரீம் கோர்ட்டில் தனியாக வாதாடி வந்தார். புகழ்பெற்ற வக்கீல்களான கபில் சிபல், கே.கே.வேணுகோபால், ப.சிதம்பரம், அருண் ஜெட்லி, அந்தியாருஜூனா ஆகியோருடன் சுப்ரீம் கோர்ட்டில் பல முக்கியவழக்குகளில் ஆஜராகியுள்ளார்.

2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் சீனியர் வக்கீலாக, நீதிபதிகளால் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த ஆங்கில புலமையும், சட்ட அறிவும், நுணுக்கங்களும் தெரிந்த வி.மோகனாவின் வாத திறமை பல வழக்குகளில் அவருக்கு வெற்றியை தேடித்தந்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டில் இனி அவர் வழங்கப்போகும். தீர்ப்புகள் நீதி தேவதை மகிழும்வகையில் நீதியை நிலைநாட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.