தலையங்கம்

ஆசிய விளையாட்டு போட்டி: ஜொலிக்கத் தொடங்கும் இந்தியா

பல பதக்கங்களை இந்திய அணியினர் பெறும் முனைப்பில், தொடக்கப் போட்டிகளிலேயே வெற்றிக்கொடியை நாட்டி வருகின்றனர்.

ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி கடந்த 19-ந் தேதி தொடங்கியது. ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் இந்தப் போட்டிகள் அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெறுகின்றன. முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி 1951-ம் ஆண்டு தொடங்கியதால், இது 75-வது ஆண்டாகும். இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஈரான், தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த 10,840 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். அனைவரும் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் முழு வீச்சில் விளையாடி வருவதால் போட்டி கடுமையாக உள்ளது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் 496 வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 36 விளையாட்டுகளில் களம் காண்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 35 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 21 வீரர்களும், 14 வீராங்கனைகளும் அங்கம் வகிக்கின்றனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு அதிக தங்கப் பதக்கங்களை குவிக்கும் வாய்ப்பு உள்ளது. கபடியை ஆசிய விளையாட்டுப் போட்டியில் சேர்த்த பெருமை மறைந்த இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரையே சேரும். 1990-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்றபோது. அவர் ஆசிய ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவராக இருந்தார். அப்போது அந்த அமைப்பின் தலைவராக இருந்த துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் அவருடைய நண்பராக இருந்தார்.

'எனது தந்தை சி.பா.ஆதித்தனார் வளர்த்த எங்கள் மாநில விளையாட்டு இது. இதை கண்டிப்பாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் சேர்க்க வேண்டும்' என்று அவர் வேண்டுகோள் விடுத்து, கபடியை போட்டியில் இடம்பெறச் செய்தார். அந்த ஆண்டு முதல் கடந்த போட்டி வரை நடைபெற்ற அனைத்து ஆண்கள் கபடி போட்டிகளிலும், ஒருமுறை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. பெண்கள் கபடி போட்டியிலும் 4 போட்டிகளில் 3 முறை இந்திய அணி வாகை சூடியுள்ளது. இந்த முறையும் கபடியில் இந்தியா வெல்லும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இப்போது நடைபெற்று வரும் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் முதலில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தனிநபர் போட்டியிலும், 3 வீராங்கனைகளைக் கொண்ட அணியிலும் 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கிவைத்தார். தொடர்ந்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் மேலும் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

அடுத்து, பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த அணியில் மதுரையைச் சேர்ந்த கமலினியும் இடம் பெற்றுள்ளார். அவருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் கைப்பற்றினார். மேலும் பல பதக்கங்களை இந்திய அணியினர் பெறும் முனைப்பில், தொடக்கப் போட்டிகளிலேயே வெற்றிக்கொடியை நாட்டி வருகின்றனர். இப்போது பல்வேறு பந்தயங்களில் ஜொலிக்கத் தொடங்கியிருக்கும் இந்திய அணியினர், எத்தனை போட்டிகளில் நட்சத்திரங்களாக மின்னி பதக்கப் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்பது வருகிற நாட்களில் தெரிந்துவிடும். அந்த நாளைத்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

SCROLL FOR NEXT