நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்ததற்காக விரலில் வைக்கப்பட்ட அடையாள மை இன்னும் பெரும்பாலானவர்களுக்கு அழியவில்லை. அதற்குள் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத பரபரப்புகளும், வினோதங்களும் அரசியலில் அரங்கேறியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆட்சியில் இருந்த தி.மு.க. கூட்டணிக்கா?, எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. கூட்டணிக்கா?, புதிய வரவாக தனித்து நின்ற விஜய்யின் த.வெ.க.வுக்கா?, எப்போதுமே தனித்து களம் காணும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கா? என்று தங்களுடைய மனத் தராசில் எடை போட்டு மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். கடந்த மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது.
தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றன. யாருக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில், தனிப்பெரும் கட்சியாக இருந்த த.வெ.க. ஆட்சி அமைக்க உரிமை கோரியது. முதலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூடாரத்தை காலி செய்துவிட்டு த.வெ.க. பக்கம் சென்று, புதிய கூட்டாளியாகியது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக சென்று த.வெ.க. உடன் கரம் கோர்த்தன. தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகள் தங்கள் நட்பை புதுப்பித்ததால் த.வெ.க. பெரும்பான்மையை நிரூபித்தது.
அவர்களோடு நின்றுவிடாமல், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்களிப்பு நேரத்தில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அ.தி.மு.க. வட்டாரத்திலும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல் அந்த அணியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி போனாலும் பரவாயில்லை என்ற முடிவில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு யாருக்கு ஆதரவாக வாக்களித்தார்களோ, அந்த த.வெ.க.விலேயே ஐக்கியமாகிவிட்டார்கள். ஆக எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த 25 பேரில், 4 பேர் கட்சியை விட்டே விலகிவிட்டநிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர், அந்த 25 பேர் மீதும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று சபாநாயகரிடம் மனுகொடுத்தனர்.
இதற்கிடையில் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த 5 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடமே தஞ்சம் புகுந்தனர். மீதி உள்ள 16 பேர் முதலுக்கே மோசமாகிவிட்டதை உணர்ந்து சி.வி.சண்முகம், விஜயபாஸ்கரை தவிர மற்றவர்கள் மறுபடியும் தாய் கழகத்துக்கே திரும்பிவிட்டனர். இப்போது அ.தி.மு.க.வின் இரு அணியினரும் கொடுத்த மனுக்கள் மீது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அதே நேரத்தில் வாக்களித்த மக்கள் இது என்ன புது குழப்பமாக இருக்கிறது. நாம் ஒரு கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தால், அதைவிட்டுவிட்டு அவர்கள் எதிர்முகாமில் இருக்கும் மற்றொரு கட்சியில் போய் சேர்ந்து புது கூட்டணி கணக்கை தொடங்கிவிட்டார்களே என்ற எண்ணத்திலும், எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி இப்படி பதவி மோகத்துக்காக துண்டாடப்பட்டுள்ளதே என்ற கவலையிலும் இருக்கிறார்கள். அரசியலே உன் பெயர்தான் குழப்பமா? என்று மக்கள் கேட்கிறார்கள்.