தலையங்கம்

தாய்மார்களுக்கு அண்ணன்; குழந்தைகளுக்கு மாமன்!

தமிழ் இலக்கிய உலகம் தாய்மாமனை வெறும் உறவாகப் பார்க்காமல், தாயின் அன்பையும், தந்தையின் கடமையையும் ஒருசேர வழங்கும் உன்னதப் பொறுப்பாகவே போற்றுகிறது.

சென்னை,

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். மதுரையில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதற்கு சிறப்பு ஒன்று உள்ளது. தென் மாவட்டங்களில், குறிப்பாக மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாய்மாமன் உறவும், தாய்மாமன் சீரும் மக்களின் வாழ்வோடு கலந்தவை. பழந்தமிழ் இலக்கியங்களில் தாய்மாமன் என்ற சொல் 'அம்மான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தாயைக் குறிக்கும் 'அம்மா' என்ற சொல்லின் ஆண் வடிவமாகக் கருதப்படுகிறது. காப்பிய காலத்திலும் தாய்மாமன் குடும்பத்தின் அச்சாணியாகத் திகழ்ந்துள்ளார். மகாபாரதத்தில் கவுரவர் பக்கம் இருந்த சகுனியும், பாண்டவர் பக்கம் இருந்த கண்ணனும் தாய்மாமன்கள்தான்.

தமிழ் இலக்கிய உலகம் தாய்மாமனை வெறும் உறவாகப் பார்க்காமல், தாயின் அன்பையும், தந்தையின் கடமையையும் ஒருசேர வழங்கும் உன்னதப் பொறுப்பாகவே போற்றுகிறது. அத்தகைய உன்னத உறவைத்தான் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கியுள்ளார். அவர் 2025-ம் ஆண்டிலேயே மதுரை மாநாட்டில் பேசும்போது, "தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினுடைய அம்மா என்னைத் தம்பி என்றும், அவங்க பெண்ணுக்கு தாய்மாமன் என்றும் சொன்னாங்க. அந்த அம்மாவுக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் உள்ள எல்லா சகோதரிகளுடைய குழந்தைகளுக்கும் நான் தாய்மாமனாகத்தான் இருப்பேன்" என்று பிரகடனப்படுத்தினார். கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, "நான் ரீல் மாமா இல்லை, ரியல் தாய்மாமா என்று கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையிலும், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும்" என்று அறிவித்தார்.

தேர்தலில் வெற்றிப் பெற்று அரசு அமைத்தவுடன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஜூன் 22-ந்தேதி, அதாவது தனது பிறந்த நாளில் இருந்து அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மும்மதங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு முதலாவதாகவும், தொடர்ந்து மேலும் 24 குழந்தைகளுக்கும் அவரே மோதிரம் அணிவித்துவிட்டு, பிரசவ வார்டில் இருந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கினார். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 7.8 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் 4.2 லட்சம், அதாவது 53 சதவீத பிரசவங்கள்தான் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. ஆக, இங்கு பிறக்கும் 4.2 லட்சம் குழந்தைகளுக்கும் முதல்-அமைச்சர்தான் தாய்மாமன் என்ற வகையில், மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு செல்லும்போது தமிழக அரசு தாய்மாமன் சீராகக் கொடுத்த தங்க மோதிரங்கள் பிஞ்சு விரலில் மின்னும். விரல் ரேகையை தொட்டு உறவாடிக்கொண்டே இருக்கும்.

தாய்மாமன் தங்க மோதிரம் பச்சிளம் குழந்தைகளுக்கு கிடைத்த வரம். சென்னையில் இந்த மோதிரங்களைப் பெற்ற தாய்மார்கள், எங்களுக்கு ஒரு அண்ணன் கிடைத்தார். எங்கள் குழந்தைகளுக்குத் தாய்மாமன் கிடைத்தார் என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் சொன்னார்கள். இன்னும் வசதிகளைப் பெருக்கினால், அங்கு கிடைக்கும் தரமான மருத்துவ சிகிச்சைகளுக்காகவும், மருத்துவ நிபுணர்களின் சேவைக்காகவும் இன்னும் நிறைய பெண்கள் அரசு மருத்துவமனைகளை நாடுவார்கள். மொத்தத்தில், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் மக்களுக்கும். அரசுக்கும் இடையே உறவுப் பாலத்தைக் கட்டமைக்கும் என்பதால், இது மிகவும் வரவேற்கத்தக்க திட்டமாகும்.

SCROLL FOR NEXT