தலையங்கம்

மேலும் ஒரு மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி..!

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதையே பா.ஜ.க. தனது குறிக்கோளாக கொண்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க., கடந்த தேர்தலின்போது 'ஹாட்ரிக்' வெற்றிபெற்று 3-வது முறையாக தொடர்ந்து மத்திய அரசாங்கத்தை வழிநடத்தி வருகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதையே தனது குறிக்கோளாக கொண்ட பா.ஜ.க. எப்படி மத்தியில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறதோ? அதுபோல மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமையவேண்டும் என்பதில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் மிகத்தீவிரமாக இருக்கிறார்கள்.

அதற்காகவே ஒவ்வொரு மாநிலத்திலும் காயை நகர்த்தி வருகிறார்கள். இதுவரை உத்தரபிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், ஒடிசா, அரியானா, உத்தரகாண்ட், அசாம், அருணாசலப்பிரதேசம், திரிபுரா, கோவா ஆகிய 12 மாநிலங்களிலும், டெல்லி யூனியன் பிரதேசத்திலும் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கிறது.

மராட்டியம், பீகார், ஆந்திரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய 6 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பா.ஜ.க.வின், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புரிந்துவருகிறது. இதில் குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக பா.ஜ.க.வின் கொடி பறக்கிறது. இதுதவிர, கோவா, அரியானா, மராட்டிய மாநிலங்களில் தொடர்ந்து 3-வது முறையாகவும், உத்தரபிரதேசம், அருணாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களில் தொடர்ந்து 2-வது முறையாகவும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது.

அடுத்து அதன் பார்வை பீகார் மீது விழுந்துள்ளது. பீகாரில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றதேர்தலில், ஐக்கிய ஜனதாதள தலைவர் ' நிதிஷ்குமார் தலைமையில், பா.ஜ.க.வும் இடம்பெற்றிருந்த கூட்டணி வெற்றிபெற்றது. இதில் மொத்தம் 243 இடங்களில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 85 இடங்களிலும், பா.ஜ.க. 89 இடங்களிலும் வாகை சூடி கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது.

ஐக்கிய ஜனதாதளத்தைவிட 4 இடங்களில் அதிகமான வெற்றியை பா.ஜ.க. பெற்றிருந்தாலும், நிதிஷ்குமாரை முதல்-மந்திரியாக கொண்டே ஆட்சியமைக்கப்பட்டது. பா.ஜ.க. கூடுதல் இடங்களை பெற்றும் கூட்டணி தர்மத்தை மதித்து நிதிஷ்குமாரை முதல்-மந்திரி ஆக்கியிருக்கிறதே? என அரசியல் உலகம் பாராட்டி கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ.க. வேறொரு கணக்கைப்போட்டது.

பீகாரில் பா.ஜ.க. முதல்-மந்திரி பொறுப்பை தன் கைவசம் வைத்திருக்கவேண்டும் என்ற முனைப்பில், நிதிஷ்குமாரை மாநிலங்களவை உறுப்பினராக்கியது. அவர் அந்த பதவியேற்ற பேச்சு அடங்குவதற்குள் பா.ஜ.க. முதல்-மந்திரியாக சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்றுள்ளார். ஆக பா.ஜ.க.வின் கணக்கில் மேலும் ஒரு மாநிலம் சேர்ந்து 14-வதாக பீகார் தாமரையை மலர் ' செய்திருக்கிறது.

நிதிஷ்குமார் 2022-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணிக்கு 'டாட்டா' சொல்லிவிட்டு 'மகா கட்பந்தன்' என்ற ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கி, அதன் சார்பில் முதல்-மந்திரி ஆனார். அந்தநேரத்தில் சாம்ராட் சவுத்ரி, நிதிஷ்குமாரை பதவியிலிருந்து விலக்கும்வரை நான். 'காவிநிற தலைப்பாகை அணிவேன்' என்று சபதம் ஏற்றார். இப்போது அது நிறைவேறியுள்ளது.

இதுவரை பா.ஜனதா முதல்-மந்திரி இல்லாத பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளாக பீகார் அரசியலை கலக்கி முதல்-மந்திரியாக இருந்த நிதிஷ்குமாரை, அதிலிருந்து அகற்றி, சாம்ராட் சவுத்ரி அந்த பொறுப்பை வசப்படுத்தியுள்ளார். இவ்வளவு காலங்களாக காவி தலைப்பாகை அணிந்திருந்த சாம்ராட் சவுத்ரி தனது சபதம் நிறைவேறிய பூரிப்பில் கடந்த வாரம் அந்த தலைப்பாகையை இறக்கி வைத்துள்ளார். எப்படி இருந்தாலும், பா.ஜ.க.வின் அதிகாரம் விரிவடைந்திருப்பதை கண்ட அரசியல் நோக்கர்கள் அடுத்த மாநிலம் எதுவோ? என தங்களுக்குள் யூகித்து கொண்டிருக்கிறார்கள்.