ஒரு நாடும், மாநிலமும் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி கண்டிப்பாக இருக்கவேண்டும். அதிலும் தொழில் வளர்ச்சிதான் வேலைவாய்ப்பை பெருக்கும். வேலைவாய்ப்பு அதிகமாக இருந்தால்தான் மக்களின் வாழ்க்கை சிறக்கும். அதனால்தான் மத்திய, மாநில அரசுகள் தொழில் தொடங்குவதற்கான அனுமதியை கொடுக்கும் முன்பு அதனால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று உறுதிப்படுத்திக்கொள்வார்கள். ஆக தொழில் வளர்ச்சிதான் மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சியாகும். இதனாலேயே புதுப்புது தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்க்க மாநிலங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. அந்தவகையில் இப்போது ஒரு புதிய போட்டிக்கு மத்திய அரசு பச்சை கொடி காட்டிவிட்டது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அடுத்த 6 ஆண்டுகளில் நாடு முழுவதும் 100 தொழில் பூங்காக்களை மாநில அரசாங்கங்களின் பங்களிப்போடு தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி நடப்பாண்டு அதாவது 2026-27 முதல் 2031-32 வரையிலான காலகட்டங்களில் செயல்படுத்தப்படும். இந்த தொழில்பூங்கா 10 ஏக்கர் முதல் ஆயிரம் ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் அமையும். ஒரு தொழில் பூங்காவில் பல தொழிற்சாலைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு தொழில்பூங்காவிலும் இதற்காக ஒரு சிறப்பு அமைப்பு அமைக்கப்பட இருக்கிறது. இந்த தொழில் பூங்காவை அமைக்கவேண்டுமென்றால் அந்த மாநில அரசுகள் நிலம் கொடுக்கவேண்டும். அங்கு அமைக்கப்பட இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசாங்கம் நிதி கொடுப்பதுதான் அதனுடைய பங்களிப்பாக இருக்கும். இந்த பங்களிப்பில் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ.ஒரு கோடி மத்திய அரசால் வழங்கப்படும்.
அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் குறைவாக இருந்தால் மத்திய அரசின் பங்களிப்பு அந்த அளவுக்கு குறையும். மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களையும் சேர்த்து கூட்டு முயற்சியாக தொடங்கினால் மத்திய அரசின் உதவி, ஏக்கருக்கு ரூ.50 லட்சமாக குறைந்துவிடும். இதில் முதல்கட்டமாக 50 தொழில் பூங்காக்களை மாநில அரசுகள் தொடங்கும்போது. அதற்கான உதவிகளை வழங்குவதற்காக ரூ.33,660 கோடி செலவிலான பாவ்யா அதாவது பாரத் ஆடியோகிக் விகாஸ் யோஜ்னா என்ற திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த 50 தொழில் பூங்காக்களையும் மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு தொடங்க மாநிலங்களுக்கிடையே போட்டிக்கான விசிலை மத்திய அரசாங்கம் அடித்துவிட்டது.
இதற்காக உயர்தரத்திலான சாத்தியக்கூறு அறிக்கைகளை மாநில அரசுகள் ஜூலை 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்துவிட்டால், உடனடியாக 20 தொழில் பூங்காக்களுக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கிவிடும். அடுத்த சுற்றில் மேலும் 30 தொழில்பூங்காக்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். 2-வது கட்டமாக தொடர்ந்து மேலும் 50 தொழில் பூங்காக்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் அறிவித்துவிட்டார். ஆக ஒரு ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள நிற்கும் வீரர்களிடம் 'ஆன் யுவர் மார்க், செட் கோ' என்று சொல்லி போட்டியை தொடங்கிவைப்பதுபோல இப்போது போட்டி தொடங்கிவிட்டது. மற்ற மாநிலங்களோடு போட்டியில் நிற்கும் தமிழக தொழில் துறைக்கு இது ஒரு சவாலாக முன் இருக்கிறது. இப்போதே முதல் 20 தொழிற்பூங்காக்களுக்காக 10 முன்மொழிவுகளுக்கான திட்ட அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்பேரில் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.விஜயகுமார் தீவிரமாக இருக்கிறார். அதில் எத்தனை தொழில்பூங்காக்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்போகிறார்கள் என்பதில்தான் அவர்களின் திறமை இருக்கிறது. சபாஷ் சரியான போட்டி! என்று போட்டி தொடங்கிவிட்டது.