தலையங்கம்

மேலும் 15 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்

செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

கல்வி கற்க வரும் மாணவர்கள் பசிக்கொடுமையை ஒருபோதும் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர்களாக இருந்தவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் சுவையான பல திட்டங்களை கொண்டுவந்தனர்.

மதிய உணவு திட்டம் - காமராஜர்

ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் சிந்தையில் இந்த திட்டம் உருவானதில் ஒரு வரலாறு இருக்கிறது.

காமராஜர் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவிக்கு சென்றபோது வழியில் ஒரு ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் காரில் இருந்து இறங்கி நின்றார். அப்போது பக்கத்து நிலத்தில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த சிறுவனை பார்த்து. 'நீ பள்ளிக்கூடம் போகவில்லையா? என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன், 'பள்ளிக்கூடத்துக்கு நான் போனால் யார் சோறு போடுவார்கள்? என்று பதில் அளித்தான்.

ஆக சோறு இல்லாமல்தான் அவன் பள்ளிக்கூடம் போகாமல் மாடு மேய்க்கிறான் என்பதை வருத்தத்துடன் அறிந்த காமராஜர், 'சோறு போட்டால் பள்ளிக்கூடம் போவாயா?" என்று கேட்டார். 'போவேனே' என்று அந்த சிறுவன் அளித்த பதில்தான் மதிய உணவு திட்டத்துக்கான விதையை தூவியது.

சத்துணவு திட்டம்

அடுத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது 1982-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இதற்காக அமரர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் அவரது மகனான தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில் கட்டிக்கொடுத்த முதல் சத்துணவு கூடத்தை திறந்துவைத்து, இந்த திட்டத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார்.

காலை உணவு திட்டம்

இதேபோல, முதல்-அமைச்சராக கலைஞர் கருணாநிதி இருந்தபோது சத்துணவோடு முட்டை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தநேரத்தில், சென்னை அசோக்நகர் அரசு பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கு சில மாணவிகள் காலை உணவு சாப்பிடாததால் சோர்வாக இருந்தனர்.

இதனையறிந்த மு.க.ஸ்டாலின், 1-வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சுவை மிகுந்த காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார். இப்போது முதல்-அமைச்சர் விஜய் இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளார்.

தன் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்மூலம் 15 லட்சம் மாணவர்கள் இனி பள்ளிகளிலேயே காலை உணவு சாப்பிடுவார்கள்.

பிரேக் பாஸ்ட்

சமையலறை மற்றும் உபகரணங்கள் இருக்கும் பள்ளிகளில் செப்டம்பர் 17-ந்தேதியும், மற்ற பள்ளிகளில் அடுத்த ஒரு மாதத்துக்குள்ளும் இந்த திட்டம் தொடங்கப்படஉள்ளது.

ஆக தமிழ்நாட்டில் இனி 34.36 லட்சம் மாணவர்களுக்கு பசிப்பிணி தெரியாது. காலை உணவு சாப்பிடாமல் இருக்கக்கூடாது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. காலை உணவு சாப்பிடாததே பல நோய்களுக்கு வாசலை திறக்கின்றன. எனவேதான் காலை உணவை ஆங்கிலத்தில், 'பிரேக் பாஸ்ட்' என்று சொல்கிறார்கள்.

அதாவது, அதற்கு நீண்டநேரம் சாப்பிடாமல் இருக்கும் நிலையை முறிப்பது என்று பொருள். முந்தைய நாள் இரவு 8 மணிக்கு சாப்பிட்ட ஒரு மாணவன் அடுத்த நாள் காலையில் சாப்பிடாமல் மதியம் 1 மணிக்கு உணவு உட்கொண்டால் 17 மணி இடைவெளி வரும்.

அந்த இடைவெளி சங்கிலியை காலை உணவு உடைத்தெறிவதால் இது மிகச்சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. ருசிக்கு சாப்பிட்டது மறந்தாலும், வாடிய வயிற்றின் ஏக்கமான பசிக்கு சாப்பிட்டது ஒருபோதும் மறக்காது.