தலையங்கம்

ஆரோக்கியமான தமிழ்நாடு

நோய் வராமல் தடுப்பதற்காக ஆண்டுதோறும் அனைவருக்கும் கட்டணமில்லா உடல் நல பரிசோதனை செயல்படுத்தப்படும்.

சென்னை,

மனிதன் நோயின்றி ஆரோக்கியமாக இருந்தால்தான் எல்லா செல்வங்களையும் அனுபவித்து பிறவி பயனை அடையமுடியும். அதனால்தான் பொய்யாமொழி புலவரான வள்ளுவர் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும். 'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்ற குறட்பாவை வடித்தார். இதற்கு கவிஞர் வைரமுத்து தன்னுடைய வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூலில் எழுதியுள்ள பொருளுரையில், நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் மூலத்தையும் அறிந்து, அந்த நோய் தீர்க்கும் வழிமுறைகளையும் தெளிந்து, அதனை பிழைபடாமல் சரிபடச் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த குறளை அடிப்படையாக வைத்தே சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட த.வெ.க. அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பும், அதன் மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த துறையின் அமைச்சரான டாக்டர் கோ.க.அருண்ராஜ் சிறந்த மருத்துவ நிபுணர் என்பதோடு, ஐ.ஆர்.எஸ். அதிகாரியாகவும் சிறப்பாக பணியாற்றியவர். அவருடைய அனுபவம் கடந்த 100 நாட்கள் அவர் ஆற்றிய பணியில் இருந்து பளிச்சிடுகிறது. அவர் தன்னுடைய துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளிக்கும்போது, 115 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அவை மொத்தத்தையும் உறுப்பினர்கள் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது என்பதால், அந்த அறிவிப்புகளையெல்லாம் பெரிய புத்தக வடிவில் வெளியிட்டிருக்கிறார்.

இதில் நோய் வராமல் தடுப்பதற்காக ஆண்டுதோறும் அனைவருக்கும் கட்டணமில்லா உடல் நல பரிசோதனை என்ற தலைப்பில் வெளியிட்ட அறிவிப்பில் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையை வழங்கும் வகையில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 295 அரசு மருத்துவமனைகள், 424 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 39 நகர்ப்புற சமுதாய சுகாதார மையங்கள் மற்றும் 463 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டுக்கு ஒருமுறை 14 அடிப்படை பரிசோதனைகளை உள்ளடக்கிய நலம் - ஒருங்கிணைந்த இலவச உடல் நல பரிசோதனை ரூ.51 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளதோடு, அந்த 14 அத்தியாவசிய பரிசோதனைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

அதில், ரத்த அழுத்தம் பார்க்கும் பரிசோதனை, இ.சி.ஜி., யூரியா, கிரியாட்டின் உள்பட பல பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பரிசோதனைகளை செய்தால் நிச்சயமாக பல நோய்கள் வராமல் தடுத்துவிட முடியும். இதுபோல தமிழ்நாட்டில் முதல் முறையாக 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்கள் வருமான வரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்-அமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதையெல்லாம்விட சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய், விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் இலவச சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்கு தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தது வள்ளுவர் கண்ட கனவை நனவாக்குவதுபோல இருக்கிறது. மொத்தத்தில் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட மருத்துவம் தொடர்பான அறிவிப்புகள் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஒரு மைல் கல்லாகும்.