தலையங்கம்

நீதிமன்றங்களின் கதவுகளை எந்த நேரமும் தட்டலாம்?

நீதிமன்றங்களின் கதவுகளை ஒரு சாதாரண மனிதன் கூட எந்த நேரத்திலும் தட்டமுடியும் என்ற புதிய அத்தியாயம் விரைவில் எழுதப்பட இருக்கிறது.

புதுடெல்லி,

மக்களோடு நேரடி தொடர்புடைய மத்திய-மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுக்கான வேலை நேரம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவம், ரெயில்வே, விமான போக்குவரத்து போன்ற பல அத்தியாவசிய சேவைகள் நேர கட்டுப்பாடு இன்றி 24 மணி நேரமும் ஓய்வின்றி இயங்குகின்றன. நீதிமன்றங்கள் குறிப்பாக, ஐகோர்ட்டின் வேலை நேரம் காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை என்றாலும், சில அசாதாரண நிகழ்வுகளின்போது காலநேரம் பார்க்காமல் நீதிபதிகள் தங்கள் வீடுகளையே கோர்ட்டு அறையாக மாற்றி வழக்குகளை விசாரிப்பது வழக்கம். எடுத்துக்காட்டாக. ஒரு நிகழ்வை கூறவேண்டும் என்றால் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி மரணம் அடைந்தபோது, அவருடைய உடலை மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா சமாதி அருகேயே அடக்கம் செய்ய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று நேரில் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அந்த கோரிக்கை மறுக்கப்பட்டதும், நள்ளிரவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் வீடுகளுக்கு சென்று முறையிட்டனர். அந்த நடுநிசியிலேயே நீதிபதி ஹூலுவாடியின் வீடு நீதிமன்றமாக மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பும், தி.மு.க தரப்பும் அனல் தெறிக்கும் வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், கருணாநிதியின் உடலை அண்ணா சமாதி அருகிலேயே அடக்கம் செய்யலாம் என்று மறுநாள் காலை 8.30 மணிக்கு தீர்ப்பளித்தது, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக இருந்தது. இதுபோன்ற நிகழ்வுகளில் மட்டுமல்லாமல், சாதாரண குடிமக்களும் அசாதாரண வழக்குகள் இருந்தால் இரவு-பகல் பார்க்காமல் எந்த நேரத்திலும் அதாவது, 24 மணி நேரமும் நீதிமன்றங்களை அணுக முடியும் வகையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவர சுப்ரீம் கோர்ட்டு பரிசீலித்து வருகிறது.

இது பொதுமக்களுக்கு மன நிறைவை தரும் செய்தியாகும். சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாஷி மற்றும் வி.மோகனா ஆகிய 3 பேர் கொண்ட அமர்வில் பிரபல பெண் வக்கீல் மகரவிஷ் ரெயின் ஒரு வாதத்தை முன்வைத்தார். அதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் நேரத்தில் நீதிமன்றத்தின் வேலை நேரம் முடிந்துவிட்டது, கோர்ட்டுகளின் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன என்பதற்காக அடுத்தநாள் காலையில் கோர்ட்டு மணி ஒலிக்கும் வரை காத்து இருக்கமுடியாது என்ற அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

சட்டவிரோத காவல், அதிகாலையில் வீடுகளை இடிப்பது, போலீஸ் சித்ரவதை, நாடு கடத்தல் போன்ற அப்பாவிகள் மீது திடீரென இழைக்கப்படும் அநீதிகளை விசாரிக்க நீதிமன்றங்களை எந்த நேரத்திலும் நாட முடியும் என்ற வகையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் அளித்த உத்தரவாதம் நீதித்துறை வரலாற்றில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐகோர்ட்டுகளை பொறுத்தமட்டில், ஒவ்வொரு கோர்ட்டுக்கும் ஒவ்வொரு விதமான நிர்வாக நடைமுறை இருக்கிறது. எனவே இதை நிர்வாக உத்தரவாக பிறப்பிக்காமல் நீதிமன்ற உத்தரவாகவே பிறப்பிப்பது சாலச் சிறந்தது என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ஆக நீதிமன்றங்களின் கதவுகளை ஒரு சாதாரண மனிதன் கூட எந்த நேரத்திலும் தட்டமுடியும் என்ற புதிய அத்தியாயம் விரைவில் எழுதப்பட இருக்கிறது.