தலையங்கம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு

மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகளை தொடங்கிவிட்டது.

புதுடெல்லி,

நாட்டில் மக்கள் தொகை எவ்வளவு இருக்கிறது? எத்தனை வீடுகள் இருக்கின்றன? என்ற தகவல்கள் அரசிடம் இருந்தால்தான் அதற்கேற்றவாறு திட்டங்களைத் தீட்டமுடியும். ஆக மக்கள் தொகை கணக்கெடுப்புதான் அனைத்து திட்டங்களுக்கும் அடிப்படையானதாகும். அந்தவகையில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற கணக்கில், 1951-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை கணக்கெடுப்பு தொய்வின்றி நடந்தது. அந்தக் கணக்குப்படி 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்திருக்கவேண்டும். ஆனால் அந்த நேரத்தில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் கோரதாண்டவம் ஆடியதால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை. அப்படியே தள்ளிப்போய்விட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் உள்ள தரவுகளின் அடிப்படையில்தான் மானிய விலையில் உணவு பொருட்கள் உள்பட நலத்திட்டங்கள் வினியோகம், 125 நாள் வேலை திட்டம், வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கான பயனாளிகளை முடிவு செய்தல் போன்ற பல திட்டங்களுக்கான வியூகங்களை வகுக்க முடியும். இதுமட்டுமல்லாமல் கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு போன்ற பல வசதிகளுக்கும் அரசு நிதி ஒதுக்க முடியும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தி, அந்த மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கும் பணிகள் இப்போது முழுமையாகத் துல்லியமாக செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பணிகளை தொடங்கிவிட்டது.

முதல் கட்டமாக வீட்டு பட்டியல், வீட்டு வசதிகள் கணக்கெடுப்புக்கான களப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்கியது. வீடுவீடாகச் சென்று களப்பணியாளர்கள் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாக ஜூலை 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சுய கணக்கெடுப்புக்கான இணையதளம் உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் வீட்டு கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்ட 33 கேள்விகளுக்கு ஏராளமானவர்கள், அவர்களே பதில் அளித்ததால் வீடுகளுக்கு களப்பணியாளர்கள் சென்று அவர்களிடம் நேரடியாக கேள்விகளைக் கேட்டு பதிலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டிய தேவையே இல்லாமல் போனது. அந்த கேள்விகளில் வீட்டு சொத்துகள், குடிநீர், மின்சாரம், சுகாதாரம், சமையலறை வசதிகள், டிஜிட்டல் இணைப்பு போன்ற அத்தியாவசிய குடிமை வசதிகளை மதிப்பிட ஏதுவாக கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இதில் 1931-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்தக் கணக்கெடுப்பில்தான் மொத்தம் 40 கேள்விகளில் சாதி குறித்த கேள்வி 10-வது கேள்வியாக இடம் பெறுகிறது. இந்த கேள்விக்கான பதிலை மட்டும் பொதுமக்கள் தங்கள் கையினால்தான் கண்டிப்பாக எழுதவேண்டும். இந்தக் கணக்கெடுப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், இதுதான் முதல் முதலாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து நடத்தப்படுவதாகும். அதாவது முழுக்க முழுக்க டிஜிட்டல் மயமான கணக்கெடுப்பு. அதேபோல 95 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் முதல் சாதிவாரி கணக்கெடுப்பும் இதுவாகும். இது தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறது.

SCROLL FOR NEXT