அரசின் ஒப்பந்தப்பணிகளை நேரடியாக விருப்பப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடமுடியாது. சாலை போடுதல், கட்டிடம் கட்டுதல் உள்பட எந்தப்பணிகளை மேற்கொள்வது என்றாலும், புதிதாக கொள்முதல் செய்யவேண்டும் என்றாலும், ஏதாவது அரசுக்கு சொந்தமான பொருட்களை விற்கவேண்டும் என்றாலும் அதற்காக டெண்டர் மூலமே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதன்பின்னரே அந்த வேலை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த டெண்டர் படிவங்கள் எல்லோருக்கும் கொடுக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. அதுபோல ஏதாவது காரணங்களை கூறி சில டெண்டர்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுகின்றன என்று பரவலாக புகார்கள் கூறப்படுவது வழக்கம்.
முதல்-அமைச்சர் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 'தனது ஆட்சியில் அனைத்து டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையுடனேயே இருக்கும். எந்த முறைகேடும் இருக்காது. மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒரு பைசாவும் தொடமாட்டோம். தொடவும் விடமாட்டோம். தொட்டால் விட மாட்டோம். இதற்கு முன் தொட்டவர்களையும் விடமாட்டோம்' என்று அடிக்கடி சொல்லி வந்தார். இப்போது டெண்டர் முறையில் பெரிய மாற்றம் செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர்களில் நிறைய பேர் பங்கேற்கவேண்டும் என்ற நோக்கத்தில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுவரை டெண்டர்களில் காண்டிராக்டர்களிடம் இருந்து கேட்கப்படும் தேவையற்ற சான்றிதழ்களால் பலர் அதை கொடுக்க முடியாமல் போனது. இதை காரணம் காட்டி டெண்டர்களில் கலந்துகொள்ள தகுதியற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டார்கள் அல்லது வேறு சில காரணம் காட்டி அவர்களின் டெண்டர்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிடுகின்றன.
இப்போது இந்த நடைமுறைகள் களையப்பட்டு வெளிப்படைத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்து, அரசின் ஒவ்வொரு துறையிலும் பதிவு பெற்ற காண்டிராக்டர்கள் இருக்கிறார்கள். அந்தந்த துறைகளின் சார்பில் வெளியிடப்படும் டெண்டர்களில் சம்பந்தப்பட்ட துறையில் பதிவு பெற்றுள்ள காண்டிராக்டர்கள் மட்டும்தான் பங்கு கொள்ளமுடியும். மற்ற துறைகளில் பதிவு செய்யப்பட்ட காண்டிராக்டர்கள் கலந்து கொள்ள முடியாது.
இப்போது த.வெ.க. அரசு காண்டிராக்டர்கள் அனைத்துத் துறை டெண்டர்களிலும் கலந்து கொள்ள முடியும் என்ற சலுகையைக்கொண்டு வந்துள்ளது. இதனால் ஒவ்வொரு டெண்டரிலும் பலத்த போட்டி இருக்கும் என்பதால் அரசுக்கு செலவு மிச்சமாகும். ஆனால் ஒரு பணியில் நிபுணத்துவம் பெற்ற காண்டிராக்டருக்கு அனைத்துப்பணிகளையும் சிறப்பாக செய்துமுடிக்க திறமை இருக்குமா? என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் இளைஞர்களும், சிறு தொழில் செய்பவர்களும் அரசின் டெண்டர்களில் முதல் முறையாக பங்கேற்க வசதியாக குறைந்த மதிப்புள்ள டெண்டர்களில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் காரணமாக படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் உள்பட புதிதாக அரசு ஒப்பந்தம் எடுக்க முன்வருபவர்களுக்கும், வளர்ந்து வரும் காண்டிராக்டர்களுக்கும் டெண்டர்கள் எளிதில் கிடைக்கும்.
இந்த புதிய முறைகள் மூலமாக, வேலை தேடும் இளைஞர்களில் பலர் குறைந்த மதிப்புள்ள டெண்டர்களை எடுத்து பணியை செய்வார்கள். இதனால் அவர்கள் காண்டிராக்டர்களாக மாறி, இந்த தொழிலின் நுணுக்கங்களை நன்கு அறிந்து, நல்ல அனுபவம் பெற்று, எதிர்காலத்தில் பெரிய காண்டிராக்டர்களாக தன்னம்பிக்கையுடன் வலம் வர முடியும். டெண்டர் எடுப்பதில் வரப்போகும் ஆரோக்கியமான போட்டி காரணமாக அரசுக்கும் செலவு மிச்சமாகி வருமானம் பெருகும். அந்தவகையில் டெண்டர் முறையில் அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்கள் எல்லாம் வரவேற்புக்குரியதே.