தலையங்கம்

பிரதமர், நிதி மந்திரியுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு

முதல்-அமைச்சர் விஜய், தமிழகத்துக்கான கோரிக்கைகளை பிரதமர் மோடியிடமும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடமும் கூறி தன் கடமையை நிறைவேற்றிவிட்டார்.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றது முதல் விஜய் தினமும் தலைமைச்செயலகத்துக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். காலை முதல் மாலை வரையிலும் அங்கேயே இருந்து தன்னுடைய அலுவல்களை சுறுசுறுப்பாக கவனித்து வருகிறார். தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று விஜய் செல்கிறார்.

கடந்த 10-ந்தேதி பதவியேற்ற அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்காமல் இருந்து வந்தார். விஜய்க்கு பின்னர் பதவியேற்ற கேரள முதல்-மந்திரி சதீசன் சில நாட்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்து, கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் முக்கியமானதாக அந்த மாநிலத்துக்கு தேவையான நிதி உதவி கோரியது இடம் பெற்றிருந்தது. இந்த சூழலில் கடந்த வாரம் புதன்கிழமை 2 நாள் பயணமாக விஜய் டெல்லி சென்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.

மோடியுடன், விஜய் மேற்கொண்ட சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பிரதமரின் நெதர்லாந்து நாட்டு பயணத்தின்போது ஆனைமங்கல செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்காக மோடிக்கு, முதல்-அமைச்சர் நன்றி தெரிவித்தார். தமிழக அரசு நிகழ்ச்சிகளில் மாநில வாழ்த்து பாடலை பாடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுரை வழங்கவேண்டும். வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும். தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய காவிரி ஆற்றின் இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை திட்டத்தை அனுமதிக்கக்கூடாது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், விஜய் கேட்டுக்கொண்டார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆக தமிழகத்துக்கு இப்போது தேவையான, உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை மட்டும் பேசியிருக்கிறார்.

இந்த சந்திப்பு நடந்த கால நேரத்தை கணக்கிட்டால், இதற்கு மேல் எதையும் விரிவாக பேசி, விளக்கி வேறு எந்த கோரிக்கைகளும் விடுத்திருக்க வாய்ப்பே இல்லை என்று புரிய முடிகிறது. சுருங்க சொல்லி விளங்க வைத்திருக்கிறார். அடுத்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, விஜய் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓசூர், கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கவேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்தார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடன் நடத்துவதாக இருந்த சந்திப்பு திடீரென்று ரத்து செய்யப்பட்டது. இந்த சந்திப்புகளில் முதல்-அமைச்சர் விஜய், தமிழகத்துக்கான கோரிக்கைகளை பிரதமர் மோடியிடமும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடமும் கூறி தன் கடமையை நிறைவேற்றிவிட்டார். ஆக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்ற பந்து இப்போது பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகிய இருவர் பக்கத்திலும்தான் இருக்கிறது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்துள்ள தமிழக நலன் சார்ந்த இந்த கோரிக்கைகளுக்கு அவர்கள் என்ன தீர்வு தரப்போகிறார்கள்?, எதை, எதையெல்லாம் உடனடியாக நிறைவேற்ற போகிறார்கள்? என்பதற்கு மத்திய அரசு தரும் பதில்கள்தான் விடை கொடுக்கும்.