தலையங்கம்

அமைச்சரவையில் கறார் காட்டிய முதல்-அமைச்சர் விஜய்

அரசில் ஊழலற்ற நிர்வாகம் என்பதில் விஜய் கொஞ்சம் கறாராகவே கர்ஜித்து கொண்டிருக்கிறார்.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு கடந்த மே மாதம் 10-ந்தேதி பதவியேற்று 6 மாதங்களை நெருங்கப்போகிறது.

இந்த 6 மாதத்தில் சாதனைகளாக பல வெற்றிகளை சொல்லலாம் என்றாலும், அரசு பணிகளுக்கான டெண்டர்களில் லஞ்சம் இல்லாததும், வெளிப்படைத்தன்மையோடு இருப்பதையும் கோடிட்டு காட்டலாம். பெரிய அளவில் மட்டுமல்லாமல், மிகச்சிறிய அளவிலும் லஞ்சம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் போலீஸ் நிலையங்களில் எதிர்பாராத செலவுகளுக்காக வழங்கப்படும் தொகையைக்கூட கணிசமாக உயர்த்தி முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். தேர்தலை சந்திப்பதற்கு முன்பு, விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டிலேயே தன்னுடைய கொள்கைத்தலைவர்கள் யார்? யார்? என்பதை அறிவித்த கையோடு, அவர்களுடைய எந்தெந்த கொள்கைகளை தன்னுடைய கட்சி பின்பற்றும் என்பதையும் விஜய் பட்டியலிட்டார்.

அதன்படி, பெரியாரின் கடவுள் மறுப்பு தவிர்த்து, சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, பெண் கல்வி உள்ளிட்ட அவரின் அனைத்து சமூகசீர்திருத்த கொள்கைகள், அதேபோல் அம்பேத்கர் தூக்கிப்பிடித்த சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்தல், சமத்துவத்தை பேணுதல், இந்திய அரசியல் அமைப்பின் வழிநின்று சமூகநீதியை நிலைநாட்டுதல், மேலும் காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான ஊழலற்ற நிர்வாகம், மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றையெல்லாம் த.வெ.க. முழுமையாக பின்பற்றும் என்று பறைசாற்றினார்.

அதோடு தமிழ் மண்சார்ந்த பெண் ஆளுமைகளான வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரையும் தன் கொள்கைத்தலைவர்களாக பிரகடனப்படுத்தினார். த.வெ.க.வின் கொள்கைத்தலைவர்கள் வழியில் சிறிதும் அடிபிசகாமல், கோடிட்டு அதேபாதையில் முதல்-அமைச்சர் விஜய் வீறுநடைபோட்டு கொண்டிருக்கிறார்.

இதில் ஊழலற்ற நிர்வாகம் என்பதை சொல்லால் மட்டுமல்ல செயலிலும் நிரூபிக்கும் வகையில், தனது தலைமையிலான அரசாங்கம் அமைந்ததிலிருந்து அதற்காக மெனக்கிட்டு வருகிறார். அந்தவகையில், முதல்-அமைச்சர் விஜய் தொடக்கத்திலிருந்தே "மக்கள் பணத்தை தொடமாட்டேன், தொடவும்விடமாட்டேன், தொட்டாலும் விடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன்" என்று சொல்லியதை இப்போதும் திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறார். மொத்தத்தில் அரசில் ஊழலற்ற நிர்வாகம் என்பதில் விஜய் கொஞ்சம் கறாராகவே கர்ஜித்து கொண்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக கடந்த வியாழக்கிழமை நடந்த 3-வது அமைச்சரவை கூட்டத்திலும் அந்த கர்ஜனையை அவர் சற்றும் குறைக்கவில்லை. அமைச்சர்களை நோக்கியும் தன் சாட்டையை எடுத்து சுழற்றி இருக்கிறார். அமைச்சர்களிடம், உங்கள் துறைகளில் லஞ்சம் என்பது கிஞ்சித்தும் இருக்கக்கூடாது.

அமைச்சர்களோ, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களோ கொஞ்சம்கூட ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் உங்கள் துறைகளில் இருக்கவேண்டும். இதுபோல அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் இடமாறுதல் விஷயத்தில் அமைச்சர்கள் தலையிடக்கூடாது. அமைச்சர்கள் மட்டுமல்லாமல், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என்று யாருமே லஞ்ச லாவண்யத்தில் துளிகூட ஈடுபடக்கூடாது. உங்கள் பணிகளில் மக்களுக்கே முன்னுரிமை கொடுத்து செயல்படவேண்டும்.

மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் இப்போதே மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். என் அறிவுரைகளை யாரும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க கொஞ்சம்கூட தயங்கமாட்டேன் என்று எச்சரிக்கும் தொணியில் கறாராகப் பேசியிருக்கிறார். லஞ்ச லாவண்யத்துக்கு எதிராக முதல்-அமைச்சர் விஜய் சுழற்றி இருக்கும் இந்த சாட்டை அமைச்சர்களோடு முடிந்துவிடுவதல்ல; அது அரசு எந்திரத்தின் அடிநாதமான கடைநிலை ஊழியர்கள் வரை மடை திறந்த வெள்ளமென பாய்ந்து, ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை மலரச்செய்யும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் நம்பிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

SCROLL FOR NEXT