தலையங்கம்

சிங்கப்பெண்ணே... சிங்கப்பெண்ணே...

சிங்கப்பெண் போலீஸ் படை உருவாக்கப்பட்டு, கடந்த 9-ந்தேதி தொடக்கவிழாவும் நடந்துமுடிந்துள்ளது.

முதல்-அமைச்சர் விஜய் நடித்த 'பிகில்' படத்தில், "சிங்கப்பெண்ணே, சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே” என்று ஒரு பாடல் அவர் பாடுவதுபோல வரும். அந்த பாடலின் கடைசி வரிகளில், "நீ பயமின்றி, நீ பயமின்றி, நீ பயமின்றி துணிந்து செல்லு" என்று விஜய் பாடுவார். ஆக சிங்கப்பெண் என்பது அவருக்கு பிடித்தமான ஒரு 'கேரக்டர்'. அதனால்தான் அவர் கடந்த மாதம் 10-ந்தேதி முதல்-அமைச்சராக பதவியேற்றபோது. 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும், அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு குழு அமைக்கப்படும் என்ற 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்த உத்தரவில் அவர் கையெழுத்திட்டு ஒரு மாதத்துக்குள் சிங்கப்பெண் போலீஸ் படை உருவாக்கப்பட்டு, கடந்த 9-ந்தேதி தொடக்கவிழாவும் நடந்துமுடிந்துள்ளது.

இந்த படையில் உள்ள அதிகாரிகள், போலீசாருக்கு வழக்கமான சீருடை இல்லாமல் காக்கி பேண்ட்டும், நீல நிறத்தில் சட்டையும், தொப்பியும் வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் பெண் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் ஒவ்வொரு காவல் மாவட்டத்துக்கும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு தொழில்நுட்ப உபகரணங்களோடு கூடிய நவீன வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் பெண் போலீசார் மிடுக்காக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு பொதுஇடங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொள்ளுதல், காவல்துறையின் இருப்பை உறுதி செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல், பொதுஇடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மக்கள் இயக்கமாக செயல்படுதல் ஆகியவை பணிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை சென்னையில் தொடங்கி வைக்கும்போது முதல்-அமைச்சர் விஜய், இந்த படைக்கென ரூ.354 கோடி முதல்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கென 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இந்த படை செயல்படும். இதோடு டிரோன் மூலமும் கண்காணிப்பு பணி நடக்கும் என்று அறிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மூலகாரணமாக விளங்கும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பேன் என்றும் அவர் வீராவேசமாக கூறினார். முதல்-அமைச்சர் அறிவித்த அடுத்தநாளே தமிழ்நாடு முழுவதும் மிடுக்கான மற்றும் துடிப்புமிக்க பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களும், பெண் போலீசாரையும் கொண்ட 70 சிங்கப்பெண் அதிரடிப்படை வாகனங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மறைந்த போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீபால் எப்போதும் 'விசிபில் போலீசிங்' இருக்கவேண்டும் என்பார். அதாவது, பார்க்கும் இடங்கள் எல்லாம் போலீசார் தென்படவேண்டும் என்று கூறுவார். அதே கருப்பொருள்தான் சிங்கப்பெண் அதிரடிப்படையின் பணிகளில் ஒன்றாகவும் வகுக்கப்பட்டுள்ளது. ஆக, 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்பதுபோல எங்கெங்கும் சிங்கப்பெண் அதிரடிப்படை வாகனங்கள் சீறிப்பாய்ந்தவாறு உலா வருவதை இனி பார்க்க முடியும். பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த முதல்-அமைச்சர் விஜய் தொடங்கியுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, குற்றங்களை செய்ய நினைப்பவர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. சிங்கம் எப்படி காட்டுக்கு ராஜாவோ, அதுபோல ஊருக்குள் வீரம் செறிந்த சிங்கப்பெண்கள் கம்பீரமாக நகர்வலம் வந்து குற்றத்தை ஒடுக்குவார்கள்.