மதுரையில் தனது இல்லத்தில் இருந்த யூடியூபர் மாரிதாசை, சென்னை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால் அவர் சொந்த ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு, ஒரு அமைச்சரின் குடும்பத்தினர் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணை குறித்த தகவலையும், மற்றொரு பெண் அமைச்சர் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய காட்சி குறித்த செய்தியையும் தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்ததே காரணம் என்று மாரிதாஸ் தரப்பு கூறுகிறது. அதேவேளையில், ஒரு பெண் அமைச்சர் குறித்து செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படத்தை வெளியிட்டு அவதூறு பரப்பியதோடு, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் கருத்துக்களை அவர் வெளியிட்டதாக அரசு தரப்பு குற்றம் சாட்டுகிறது.
மாரிதாஸ் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்றாலும், இந்த விவகாரத்தை கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமையின் கோணத்திலும் அணுக வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1) (ஏ) பிரிவு, ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது கருத்துகள், எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையை வழங்குகிறது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (2) பிரிவு சில நியாயமான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு. பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசு அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் அதேநேரத்தில், கருத்து வெளியிட்டதற்காக ஒருவரை கைது செய்வது சரியா? என்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் மேற்கோள் காட்டி தெளிவுப்படுத்தி உள்ளது.
உதாரணமாக, 2015-ம் ஆண்டு ஸ்ரேயா சிங்கால் வழக்கில், பேஸ்புக் பதிவில் அரசியல்வாதி ஒருவரை விமர்சித்ததாக மும்பையைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் 2012-ல் கைது செய்யப்பட்டதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த வழக்கை ரத்து செய்ததோடு, “ஒரு கருத்து யாருக்காவது எரிச்சலையோ, கோபத்தையோ ஏற்படுத்துகிறது என்பதற்காக மட்டும் கைது செய்ய முடியாது" என்று தெளிவுபடுத்தியது. அதேபோல், கேதார் நாத் சிங் என்பவர் பீகார் அரசை கடுமையாக விமர்சித்ததால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 1962-ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி புவனேஷ்வர் பிரசாத் சின்ஹா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு, கருத்துரிமை தொடர்பான மிக முக்கியமான வழிகாட்டுதலாக இன்றும் பல வழக்குகளில் மேற்கோள் காட்டப்படுகிறது. அதாவது அரசாங்கத்தின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் விமர்சிக்க குடிமகனுக்கு உரிமை உண்டு. அந்த விமர்சனம் பொது அமைதியை சீர்குலைத்து, வன்முறையை தூண்டினால் மட்டுமே அரசு தலையிடமுடியும் என்று தெளிவுப்படுத்தியுள்ளது.
ஒரு அரசு அல்லது அமைச்சர் அல்லது தனிநபர் தனக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டதாக கருதினால், அதற்கென சட்டத்தில் போதுமான தீர்வுகள் உள்ளன. அவதூறு வழக்கு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றத்தின் முன் உண்மையை நிரூபிக்க முடியும். அதனால்தான், கருத்து வெளியீடு தொடர்பான விவகாரங்களில் கைது என்பது முதல் தேர்வாக அல்ல, கடைசி கட்ட நடவடிக்கையாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. சட்டம் வழங்கியுள்ள மாற்று வழிமுறைகளை பின்பற்றாமல், நேரடியாக கைது நடவடிக்கையில் இறங்குவது, கோர்ட்டுகள் முன்பு நிலைத்து நிற்காமல் போய்விடும்.