தலையங்கம்

தொடக்க ஊழலைத் தடுக்கும் இந்தத் தொகை

போலீஸ் நிலையங்களுக்கு ஏற்படும் செலவுகளை மேற்கொள்ள 'எதிர்பாராத செலவு நிதி' என்ற பெயரில் குறைவான தொகை அரசால் வழங்கப்பட்டு வந்தது.

முதல்-அமைச்சர் விஜய், வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் இருக்கவேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். தேர்தலுக்கு முன்பிருந்தே பல கூட்டங்களிலும், சட்டசபையிலும் அவர் பிரகடனப்படுத்தியது. "மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாகூடத் தொடமாட்டோம்: தொடவும் விடமாட்டோம்; தொட்டால் விடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்” என்பதுதான். அதை நடைமுறைப்படுத்தும் வகையில், அனைத்து துறைகளிலும் லஞ்சம் நுழைவதற்கான கதவுகளை அடைத்து வருகிறார். லஞ்சம் புரளும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இப்போது டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமங்களும், வாகன பதிவு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. பத்திரப்பதிவு அலுவலகங்களில் வீட்டில் இருந்தே இணையவழியில் சில குறிப்பிட்ட பத்திரப்பதிவுகளை செய்யலாம் என்பதால், அங்கும் பெருமளவில் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.

இப்போது அவரது பார்வை காவல்துறையின் மீது திரும்பியுள்ளது. மக்களிடம் லஞ்சமாக கேட்பது பெரிய தொகையாக இருந்தாலும், குறைவான தொகையாக இருந்தாலும், அது கிஞ்சித்தும் இருக்கக்கூடாது என்ற நோக்கில், அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் 1,385 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 245 மகளிர் போலீஸ் நிலையங்கள், 290 போக்குவரத்து மற்றும் புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையங்கள் உள்பட மொத்தம் 2,050 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

குற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் போலீஸ் நிலையங்கள் சிறிய, நடுத்தர, பெரிய என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த போலீஸ் நிலையங்களுக்கு ஏற்படும் செலவுகளை மேற்கொள்ள 'எதிர்பாராத செலவு நிதி' என்ற பெயரில் குறைவான தொகை அரசால் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த 2013-ம் ஆண்டு, இந்த மூன்று வகை போலீஸ் நிலையங்களுக்கும் மாதந்தோறும் முறையே ரூ.3,000, ரூ.5,000, ரூ.7,000 என வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை 2022-ம் ஆண்டு முறையே ரூ.3,750, ரூ.6,000, ரூ.8,250 என உயர்த்தப்பட்டது. இதுவே நடைமுறையில் இருந்து வந்தது. இந்த தொகை போதுமானதாக இல்லாததால், போலீஸ் நிலையங்களுக்கான செலவுகளை புகார் கொடுக்க வருபவர்களிடம் இருந்தே கேட்டு வாங்கிக்கொள்ளும் நிலை இருந்துவருகிறது.

போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து பணம் பெறப்படும் முதல் முறைகேடாக இதை குறிப்பிடலாம். போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் புகார்களை எழுதுவதற்கான காகிதங்கள், தூய்மை பணிகள், தேநீர் செலவு, ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களின் உடல்களை பிணவறைக்கு கொண்டுசெல்வது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் எதிர்பாராத செலவுகள் ஏற்படுகின்றன. இதற்கான தொகையை பொதுமக்களிடமே போலீசார் கேட்டு பெற்று வருகின்றனர்.

போலீஸ் நிலையங்களில் இந்த சிறிய தொகைக்காகக் கூட லஞ்சம் பரிமாறப்பட கூடாது என்ற எண்ணத்தில், முதல்-அமைச்சர் விஜய், எதிர்பாராத செலவு நிதியை பல மடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாதம் ரூ.3,750 பெற்று வந்த போலீஸ் நிலையங்களுக்கு இனி ரூ.30,000, ரூ.6,000 பெற்று வந்த போலீஸ் நிலையங்களுக்கு இனி ரூ.40,000. ரூ.8,250 பெற்றுவந்த போலீஸ் நிலையங்களுக்கு இனி ரூ.50,000 வழங்கப்படும். இந்த அறிவிப்பு போலீசாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இனி, சிறிய செலவுகளுக்காக பொதுமக்களிடம் தயங்கித் தயங்கிப் பணம் கேட்க வேண்டிய அவசியம் போலீசாருக்கு இருக்காது. காக்கியின் கரங்களில் இனி கறை படியாது. ஒரு பைசாகூட செலவில்லாமல் பொதுமக்களும் தங்கள் புகார்களை பதிவு செய்யமுடியும். அரசின் நல்ல நோக்கத்தை புரிந்துகொண்டு, காவல்துறை லஞ்ச லாவண்யமற்ற, தூய்மையான துறையாக விளங்குவதற்கு இந்த நடவடிக்கை பிள்ளையார் சுழியாக அமையும் என்று நேர்மையான அதிகாரிகள் கருதுகிறார்கள்.

SCROLL FOR NEXT