தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரே நாளில், அதாவது கடந்த செவ்வாய்க்கிழமையன்று அரசு சார்பில் வெளியிடப்பட்ட 2 அறிவிப்புகள் பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளன. தீபாவளி வந்துவிட்டால் முன்பெல்லாம் வீடுகளில் இல்லத்தரசிகள் சில நாட்களுக்கு முன்பே அதிரசம், முறுக்கு. சீடை, அச்சு முறுக்கு என்று விதவிதமாக பலகாரங்கள் செய்யத் தொடங்கிவிடுவார்கள்.
ஆனால், தற்போதைய பரபரப்பான உலகில் பெரும்பாலான இல்லத்தரசிகள் பணிபுரியும் மகளிராக இருப்பதால் கடைகளிலேயே பலகாரம் வாங்குவது வழக்கமாகிவிட்டது. பாரம்பரிய பலகாரங்கள் போய், விதவிதமான புதிய ரக பலகாரங்கள் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டன. என்னதான் கடைகளில் வாங்கினாலும், ஆவின் நிறுவனத்தில் வாங்கும் நெய், வெண்ணெய் மற்றும் பலகாரங்களுக்கு என்று தனி மவுசு இருக்கிறது.
வீடுகளில் சமையலுக்குத் தேவையான நெய் மற்றும் வெண்ணெய், தயிர் போன்றவற்றுக்கு இல்லத்தரசிகளிடம் கடும் கிராக்கி உண்டு. அப்படி, தீபாவளிக்கு ஆவின் நிறுவன கடைகளில் வாங்குவதற்கு வீடுகளில் பெண்கள் பட்ஜெட் போட்டுக்கொண்டு இருந்தனர். அந்தநேரத்தில், செவ்வாய்க்கிழமை காலையில் அதிர்ச்சியூட்டும் விதமாக நெய், வெண்ணெய், இனிப்புகள் உள்பட 67 வகையான பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நல்ல வேளையாக, இந்த பட்டியலில் பால் விலை இல்லை என்பது ஆறுதலான செய்தி. மூலப்பொருட்கள் விலை உயர்வு, கொள்முதல் செலவு, பிற இணை செலவுகள்தான் விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து 'தினத்தந்தி' சார்பில் தமிழ்நாடு முழுவதும் பெண்களிடம் கருத்து கேட்டதில், அவர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்கள். விலையை உயர்த்தும் முன்பு பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம் கருத்து கேட்டிருக்கலாமே என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. தீபாவளி செலவை இந்த விலை உயர்வு அதிகரித்துவிடும் என்கிறார்கள்.
காலையில் இந்த அதிர்ச்சி என்றால், நள்ளிரவில் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ஆட்டோ கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது ஆட்டோ டிரைவர்களுக்கு மகிழ்ச்சியையும், பொதுமக்களுக்கு மனநிறைவையும் தந்துள்ளது. கடைசியாக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.72 ஆகத்தான் இருந்தது. அதன்பிறகு பெட்ரோல் விலை பல முறை உயர்ந்து, இப்போது ஒரு லிட்டர் ரூ.108 ஆக இருந்தபோதும் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்துவந்தது. ஆட்டோ டிரைவர்களும் தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்பதால் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை. தாங்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம் என்று கேட்பதும், பொதுமக்கள் குறைத்து கேட்பதும். கடைசியில் இருவரும் சமரசம் பேசி ஒரு கட்டணத்தை நிர்ணயிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
ஆட்டோக்களில் மீட்டர்களுக்கு வேலையே இல்லை. நீண்ட நெடுநாட்களாகப் பொதுமக்களும் அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர் போட்டு ஓட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவந்தனர். ஆட்டோ டிரைவர்களும், பொதுமக்களிடம் இன்முகத்தோடு பேசி பயணத்தைத் தொடர்வதற்கும், தங்களுக்கு கட்டுப்படியாகும் புதிய கட்டணத்தை அரசு நிர்ணயிக்கவேண்டும் என்று கருதினர். அப்படி நிர்ணயிக்கப்பட்டால், பயணம் செய்யவருபவர்களிடம் வாதம் செய்துகொண்டு இருக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைத்தனர். இப்போது மீட்டர் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணத்தை மீட்டர்களில் பொருத்த அரசு 6 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. 6 மாத காலம் வரை பொறுத்திருக்காமல், அனைத்து ஆட்டோ டிரைவர்களும் புதிய கட்டண மீட்டரை சீக்கிரத்தில் பொருத்தி. ஆட்டோ பயணம் ஆனந்தமான பயணம் என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.