விமான பயணம் என்பது. மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் இருக்கின்றன. சில வளர்ந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை குறைவுதான்.
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு போதிய இடவசதி இல்லாததால், அந்த பணியையும் மேற்கொள்ள முடியவில்லை. மேலும், பல உள்நாட்டு விமானங்களும், சர்வதேச விமானங்களும் வந்து செல்லவேண்டுமென்றால், இன்னொரு விமான நிலையம் மிகவும் அவசரமான தேவையாகும். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லாமல் அந்த திட்டம் ரப்பராக இழுத்துக்கொண்டே போகிறது.
2014-ம் ஆண்டு வரை, விமானங்களின் எண்ணிக்கையிலும், அதிக பயணிகளை கையாள்வதிலும் இந்தியாவில் டெல்லி, மும்பைக்கு அடுத்தப்படியாக சென்னை விமான நிலையம் 3-வது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது பெங்களூரு 3-வது இடத்திலும், ஐதராபாத் 4-வது இடத்திலும் இருக்கின்றன. சென்னை 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. அடுத்து 6-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா, சென்னை விமான நிலையத்தை முந்துவதற்கு நெருங்கிவிட்டது.
இதற்கு நிறைய விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை சென்னையில் தொடங்க முன்வராததே காரணம் ஆகும். ஆனால், சென்னையில் இருந்து செல்வதற்கு பயணிகள் இருக்கிறார்கள். அவர்கள் பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களுக்குச் சென்று, அங்கிருந்து தாங்கள் செல்லவேண்டிய வெளிநாடுகளுக்கான விமானங்களை பிடிக்கிறார்கள்.
விமான சேவையை பொறுத்தமட்டில், அதிக செலவாகுவது எரிபொருளுக்குத்தான். விமான நிலையங்களில் ஒரு விமானம் எரிபொருள் நிரப்பவேண்டும் என்றால், அதற்கான விலை முக்கியம். தமிழ்நாட்டில், மாநில அரசு விதிக்கும் 'வாட்' என்ற மதிப்பு கூட்டு வரி மற்ற மாநிலங்களைவிட அதிகமாக இருக்கிறது. இங்கு உள்ள விமான நிலையங்களில் விமான எரிபொருளுக்கு 29 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
நமது அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் 18 சதவீதமும், ஆந்திராவில் ஒரு சதவீதமும், தெலுங்கானாவில் ஒரு சதவீதமும் மட்டுமே இருப்பதால், விமான நிறுவனங்கள் அந்த மாநிலங்களின் விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கே முன்னுரிமை கொடுத்தன. இதனால், சிறிய விமானங்கள் எல்லாம் அங்கேயே அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்த குறையை போக்க முதல்-அமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்துவிட்டார்.
விமான எரிபொருளுக்கு தமிழ்நாட்டில் அதாவது. சென்னையில் 16 சதவீதமும், மற்ற இடங்களில் உள்ள விமான நிலையங்களில் ஒரு சதவீதமும் மட்டுமே வாட் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வருகிற நவம்பர் 1-ந்தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அரசின் இந்த வரவேற்கத்தக்க நடவடிக்கையால் இனி தமிழ்நாட்டுக்கு கூடுதல் விமானங்கள் வந்து செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இதனால், ஒரு முன்னணி விமான நிறுவனம் தனது விமான சேவையை 25 சதவீத அளவுக்கு உயர்த்துவோம் என்று உறுதியளித்திருக்கிறது. மற்றொரு நிறுவனம் 8 சதவீத அளவுக்கு அதிகரிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் இருந்து இனி முக்கிய இடங்களுக்கு மிக எளிதாக விமானத்தில் சென்று வரமுடியும். இதன்மூலம் சுற்றுலா, வர்த்தகம், பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில் ரீதியான பயணங்கள் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இனி விமான நிறுவனங்களுக்கிடையே டிக்கெட் கட்டணங்களை நிர்ணயிப்பதில் போட்டி வந்துவிடும். அது பயணிகளுக்கு கட்டண சலுகை உள்ளிட்ட பலன்களை அளிக்கும்.