தலையங்கம்

மருத்துவ ஆலோசனைக்கு டாக்டர் சாட் ஜிபிடியா?

ஏ.ஐ. மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெற்று சைபர்காண்ட்ரியா ஆபத்தில் விழுந்து விட வேண்டாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு, அதாவது ஏ.ஐ.யின் தாக்கம் சமீபகாலங்களாகவே அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது. மனிதன் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பல பணிகளை இப்போது ஏ.ஐ.யே சில வினாடிகளில் செய்து முடித்து விடுகிறது. இது அறிவியலின் பரிணாம வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டாலும், கத்தி ஒரு புறம் மட்டும் கூர்மையானதாக இருந்தால் மட்டுமே அதை ஆக்கப்பூர்வ செயல்களுக்கு பயன்படுத்த முடியும். இருபுறமும் கூர்மையாக இருந்தால் அது கையாள்பவர்களின் கைகளையே பதம் பார்த்து விடும். பல துறைகளில் ஏ.ஐ.யின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டு இருக்கும் சூழ்நிலையில், சில நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் ஆதாரமாக ஏ.ஐ. கொடுத்த தகவல்களின் அடிப்படையில் சில தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வக்கீல் ஒருவர் வாதாடினார். ஆனால் அவர் மேற்கோள் காட்டிய தீர்ப்புகள் அவர் கூறியதுபோல வழங்கப்படவே இல்லை என்பதை கண்டுபிடித்த நீதிபதிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.

அதே நிலை மேலும் பல வழக்குகளில் தொடர்ந்ததால், உஷாரான சுப்ரீம் கோர்ட்டு, நீதித்துறையில் ஏ.ஐ.யின் பயன்பாடு எந்த அளவில் இருக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை 35 பக்கங்களில் வெளியிட்டுள்ளது. அடுத்து ரிசர்வ் வங்கியும் ஏ.ஐ. மூலம் வங்கிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்துகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. உங்கள் மென்பொருளில் இருக்கும் ஓட்டைகளை ஏ.ஐ.யை பயன்படுத்தி யாராவது கண்டுபிடித்து, அதனுள் நுழைந்து முறைகேட்டில் ஈடுபடுவதற்கு முன்பு, அதே ஏ.ஐ.யை பயன்படுத்தி நீங்களே அந்த ஓட்டைகளை கண்டுபிடித்து ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை தாருங்கள் என்று தகவல் தெரிவித்துள்ளது.

ஏ.ஐ. பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் பணத்தை சைபர் குற்றவாளிகள் சுருட்டுவதற்கு முன்னால், வங்கிகளே இந்த நடவடிக்கையை எடுத்து வருகிற 30-ந்தேதிக்குள் அறிக்கை அனுப்ப ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அச்சத்துக்கு காரணம் சாட் ஜிபிடி, ஜெமினி ஆகிய ஏ.ஐ.க்களை பின்னுக்கு தள்ளிவிட்டு இப்போது அபார வளர்ச்சி பெற்று வரும் ஆந்த்ரோபிக் நிறுவனம் வெளியிட்டுள்ள 'கிளாட் மைதோஸ்' தான். இந்த மைதோஸ் ஏ.ஐ., மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத மென்பொருள் மற்றும் இணையதள ஓட்டைகளை மிக எளிதாக கண்டறிந்து, சைபர் குற்றவாளிகள் அந்த இணையதளத்தையோ அல்லது மென்பொருளையோ செயலிழக்க செய்யவோ அல்லது தவறாக பயன்படுத்தவோ வழிவகுத்து கொடுத்துவிடும்.

இப்படி பல துறைகளில் இருமுனை கத்தியாக இருக்கும் ஏ.ஐ., இப்போது மருத்துவ துறைக்குள்ளும் புகுந்து விட்டது. மருத்துவ துறைக்குள் ஏ.ஐ.யின் ஊடுருவலுக்கு 'சைபர்காண்ட்ரியா' என்று பெயர் வைத்துள்ளனர். அதாவது, ஏ.ஐ. மூலம் உடல்நல தகவல்களை அளவுக்கு மீறி தேடி, சாதாரண அறிகுறிகளையே கடுமையான நோய்களுக்கான அறிகுறிகளாக தெரிவித்து பார்ப்பவர்களை பயங்காட்டிவிடும் மனநிலைதான் இது. அதாவது இந்த காலத்து இளைஞர்கள் உடல்நலக்குறைவு என்றால் டாக்டர்களிடம் போகாமல், சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏ.ஐ.க்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெற்று, அதில் உள்ள ஆபத்தை அறியாமல் சுய மருத்துவம் செய்து கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, சாதாரண நெஞ்சுவலி அல்லது வாயு தொந்தரவினால் ஏற்படும் வலி என்றாலும், அதை மாரடைப்பு என்று சொல்லி ஏ.ஐ. மரண பயத்தை காட்டி விடுகிறது. எனவே, ஏ.ஐ. மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெற்று சைபர்காண்ட்ரியா ஆபத்தில் விழுந்து விட வேண்டாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.