தலையங்கம்

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு

பதவியேற்ற மேடையிலேயே தேர்தல் அறிக்கையில் கூறிய 3 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அரசாணை பிறப்பிக்கும் கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.

தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் தலை விரித்தாடுகிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போடும் இளைய சமுதாயம் போதையால் பாதை மாறுகிறது. மாநிலத்தை தாங்கி பிடிக்கவேண்டிய அந்த தூண்கள், போதை அரக்கனின் பிடியில் சிக்கி சாய்ந்து கிடக்கின்றன.

இளைய தலைமுறையை சீரழிக்கும் இந்த போதை கலாசாரத்தால் கற்பழிப்பு, கொலை போன்ற பல கொடூர குற்றங்கள் அரங்கேறுகின்றன. அதிலும் இப்போது இளைஞர்கள் இந்த கொடிய பழக்கத்துக்கு அடிமையாகி தங்கள் உடல் நலத்தையும், மன நலத்தையும் கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

போதைப்பொருள் ஒழிப்புக்காக தீவிர நடவடிக்கை எடுத்த ஓய்வுபெற்ற உயர் போலீஸ் அதிகாரியான பெ.கண்ணப்பன் சமீபத்தில் எழுதிய கட்டுரையில், கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாடு தமிழ்நாட்டில் வேகமாக அதிகரித்துள்ளதை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. கஞ்சா மட்டுமல்லாமல் ஒப்பியம், ஹெராயின் போன்ற பொருட்களின் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்கள் தங்கும் இடங்களுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை தங்கு தடையில்லாமல் நடைபெறுகிறது. 'டார்க் வெப்' உள்ளிட்ட இணையவழி வர்த்தகம் மூலம் தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.

தமிழ்நாட்டையே தள்ளாட வைத்துக்கொண்டிருக்கும் இந்த மோசமான நிலையை போக்க யார் வருவார்கள்? என்று தமிழ்நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், 'உங்கள் விஜய் நான் வாரேன்' என்று சொல்வதுபோல தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தான் கலந்துகொண்ட அனைத்து பிரசார கூட்டங்களிலும் தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இதனை ஒடுக்க த.வெ.க.வால்தான் முடியும். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று பேசிவந்தார்.

இதுமட்டுமல்லாமல், தனது தேர்தல் அறிக்கையிலும் போதைப்பொருள் ஒழிப்புக்காக முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் தடுப்பு படை உருவாக்கப்படும்.

இதன்மூலம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு போதைப்பொருள் பயன்பாடு அறவே நீக்கப்படும். போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் போதை எதிர்ப்பு மன்றம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

சொன்னதை நிறைவேற்றும் வகையில் தானும், அமைச்சர்களும் பதவியேற்ற மேடையிலேயே தேர்தல் அறிக்கையில் கூறிய 3 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அரசாணை பிறப்பிக்கும் கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். அதில் மிகவும் முக்கியமானது போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய அரசாணை ஆகும். இதனைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி, தமிழ்நாட்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு ஒன்று வீதம் 37 போதைப்பொருள் தடுப்பு போலீஸ் நிலையங்களும், 9 கமிஷனரகங்களிலும் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 போலீஸ் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும். இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது. சென்னையில் மட்டும் 12 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. ஆக போதைப்பொருள் ஒழிப்புக்கான வேட்டைக்கு சிங்கம் புறப்பட்டுவிட்டது.

போதைப்பொருட்களுக்கு விரைவில் முடிவுரை எழுதி, தமிழகத்தின் பாதை இனி வளர்ச்சி பாதை தான் என்ற நிலையை எட்டுவதற்கான நடவடிக்கைகளை இந்த தடுப்பு படை எடுக்கத் தொடங்கிவிடும்.