நாட்டில் மிக சக்திவாய்ந்த தன்னாட்சி அமைப்பாக தேர்தல் ஆணையம் திகழ்கிறது. 1950-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி அரசியல் சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. முதலில் ஒரு தலைமை தேர்தல் கமிஷனரை மட்டுமே கொண்டு செயல்பட்ட இந்த அமைப்பில், 1989-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு முதல்முறையாக தலைமை தேர்தல் கமிஷனரோடு கூடுதலாக 2 தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். 1993-ம் ஆண்டு டி.என்.சேஷன் தலைமை தேர்தல் கமிஷனராக இருந்தபோது, எம்.எஸ்.கில். சி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்தல் கமிஷனர்களாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து. அவர் சுப்ரீம்கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார். தேர்தல் கமிஷனர்கள் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்த சுப்ரீம்கோர்ட்டு, மூவருக்கும் முடிவுகளை எடுப்பதில் சரிசமமான அதிகாரம் உண்டு என்று வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை பிறப்பித்தது. அதுதான் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.
பொதுவாக தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசு அல்லது எதிர்க்கட்சிகளுக்கும் இடையேதான் பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், இப்போது முதல்முறையாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கும். மற்ற 2 தேர்தல் கமிஷனர்களான சந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. தேர்தல் கமிஷனில் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படவேண்டும். ஆனால் கடந்த ஓராண்டுக்குள்ளாக தலைமை தேர்தல் கமிஷனர் எடுத்த முடிவுகளுக்கு 14 முறை கமிஷனர்கள் சந்துவும், விவேக் ஜோஷியும் தங்களது ஆட்சேபணைகளை எழுத்துப்பூர்வமாகவே தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது பெயர் சேர்த்தல், நீக்குதல், முதல்முறை வாக்காளர்களை சேர்க்கும் படிவம் 6-ன் நடைமுறைகள் என்று பல முக்கிய முடிவுகள் தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளனர். மேலும், பல முடிவுகள், உத்தரவுகள் தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்திருப்பது புயலை கிளப்பியுள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த குரலில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்தநிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் கட்சி நிர்வாகிகள் விமானத்தில் டெல்லி வந்தனர். அப்போது அவர்கள் விமானத்திலேயே கைது செய்யப்பட்டு டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். டெல்லி கோர்ட்டு. ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கும். சட்டம்-ஒழுங்கிற்கும் எந்தவித குந்தகமும் விளைவிக்கக் கூடாது என்று நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியுள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக மற்ற கட்சிகளும் இப்போது களத்தில் இறங்கியுள்ளதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் ஆணையத்தில் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை இல்லாமலோ ஏதேனும் முடிவுகள் (எஸ்.ஐ.ஆர்.) எடுக்கப்பட்டிருந்தால், அதை ரத்து செய்வோம் என்று எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் எஸ்.ஐ.ஆர். அடிப்படையில் தமிழகம், மேற்கு வங்காளம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தல்களை ரத்து செய்யவேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருக்கிறது. ஆக, தலைமை தேர்தல் கமிஷனரை சுற்றி இப்போது கண்டன கணைகள் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன. இந்திய அரசியல் வரலாற்றில் இதுபோன்ற நிலைமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. இதற்கிடையே, ஞானேஷ்குமார் கேரளத்தில் பணியாற்றியபோது நடந்த ஊழல் தொடர்பாகவும் விசாரணை தொடங்கியுள்ளதாக கேரளம் அரசு அறிவித்திருக்கிறது. ஆக, இப்போது அனைவரின் கண்களும் சுப்ரீம்கோர்ட்டை நோக்கித்தான் இருக்கிறது.