தலையங்கம்

இணையதளத்தின் மூலம் உருவாகும் கட்சிகள்

இன்ஸ்டாகிராமில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற இயக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2.27 கோடியைக் கடந்துள்ளது.

நவீன உலகில் மிகவும் சக்தியுள்ள ஆயுதம் என்றால் அது சமூகவலைதளம்தான். அரசியலில் ஆர்வம்கொண்ட இளைஞர் பட்டாளம் இப்போது இதை கையில் எடுத்துக்கொண்டுவிட்டது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால், தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியைப்பிடித்த த.வெ.க.வை கூறலாம். இளைஞர்கள் மத்தியில் சமூகவலைதளங்கள் பெற்றுள்ள செல்வாக்குதான் அரசியல், சமூக மற்றும் பொருளாதார தளங்களில் புதிய மாற்றங்களை உருவாக்கி வருகிறது. இதுவரை தோன்றிய அரசியல் கட்சிகள் எத்தனையோ பொதுக்கூட்டங்கள், அறிக்கைகள், பேரணிகள், மாநாடுகள், போராட்டங்களுக்குப் பிறகே கட்சியைப் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறி, அதன் பிறகு தொடங்கப்பட்டன. ஆனால் இன்று ஒரு சமூக வலைதளப்பதிவு. ஒரு காணொலி அல்லது ஒரு இணைய பிரசாரம் கூட ஆயிரக்கணக்கான தொண்டர்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக மாறியுள்ளது.

கடந்த மாதம் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், 'சமூக அமைப்பைத் தாக்கும் சில ஒட்டுண்ணிகள் உள்ளனர். தங்களுக்கு வேலை கிடைக்காத நிலையில் கரப்பான் பூச்சிகளைப் போன்ற மனிதர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் ஊடகவியலாளர்களாகவோ, சமூக ஊடக ஆர்வலர்களாகவோ அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களாகவோ மாறி அனைவரையும் தாக்கத் தொடங்குகிறார்கள்' என்று வாய்மொழியாக குறிப்பிட்டார். ஆனால் மறுநாளே அவர், தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், போலிப் பட்டங்களைப் பயன்படுத்தி சட்டத்துறைகளில் நுழைந்து தவறாகச் செயல்படுபவர்களை மட்டுமே தான் அவ்வாறு குறிப்பிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

இருப்பினும் கரப்பான் பூச்சி என்ற அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மறுநாளே ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அரசியல்-தகவல் தொடர்பு வியூக வகுப்பாளர் அபிஜீத் திப்கே, இன்ஸ்டாகிராமில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” என்ற பெயரில் ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். இளைஞர்களின் பிரச்சினைகளான நீட் தேர்வு ரத்து மற்றும் பிளஸ்-2 தேர்வு மதிப்பீட்டு முறைகேடு விவகாரங்களை கையில் எடுத்த அந்த இயக்கம், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்ட அந்த இயக்கத்துக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், அந்த இயக்கம் தொடங்கப்பட்ட 24-வது நாளில், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2.27 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் கட்சிகளில் அதிகபட்சமாக காங்கிரசை 1.27 கோடி பேரும், பா.ஜனதாவை 94 லட்சம் பேரும் பின்தொடரும் நிலையில் அவர்களையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இயக்கம் மிஞ்சி விட்டது. அதுபோல தமிழ்நாட்டிலும் பா.ஜனதாவில் இருந்து விலகிய அடுத்த நாளே அண்ணாமலை, சமூகவலைதளத்தில் பேசி, "நாம்தான் தலைவர்கள்” என்ற ஒரு புதிய இயக்கத்தை அறிவித்து, அதில் சேர வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இதையேற்று 4 நாட்களிலேயே 16.49 லட்சம் பேர் அவருடைய இயக்கத்தில் சேர்ந்து விட்டனர். இந்த எண்ணிக்கை, 2026 சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு வாக்களித்த 14 லட்சத்து 64 ஆயிரம் பேரின் எண்ணிக்கையை விட அதிகமாகும். பிரசாரம் மட்டுமே இடம்பெற்று இருந்த சமூக வலைதளத்தில் இப்போது 2 கட்சிகள் தொடங்கப்பட்டு ஆதரவு பெருகுவதைப் பார்த்தால் இளைஞர்களிடையே இணையதளத்தின் வீரியம் புரிகிறது.