இந்தியாவில் உள்ள முதல் விண்வெளி ஏவுதளம், தமிழக எல்லைக்கு அருகில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ளது. 2-வது ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. அங்கு இருந்து எஸ்.எஸ்.எல்.வி. ரக அதாவது சிறிய வகை செயற்கைக்கோள்களைத்தான் விண்ணில் ஏவ முடியும். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 1971-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதிதான் முதல் ராக்கெட், அதாவது ரோகிணி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் 2 ஏவுதளங்கள் உள்ளன. இதுவரை 106 ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்துள்ளன. இந்த நிலையில், இந்திய விண்வெளி வரலாற்றில் மற்றொரு பெரிய சாதனை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 107-வது ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி.-எப்17 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட், இ.ஓ.எஸ்.-05 என்ற செயற்கைக்கோளை 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் 18 நிமிடம் 35 விநாடிகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. இந்தியா இதுவரை 36 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் பல செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியிருந்தாலும், அவை வானிலை மற்றும் தகவல் தொடர்பு போன்ற தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், அந்த உயரத்தில் நிலைநிறுத்தப்படும் இந்தியாவின் முதல் புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் 'இ.ஓ.எஸ்.-05' ஆகும். இந்தச் செயற்கைக்கோள், பூமி தன்னைத்தானே எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறதோ, அதே வேகத்தில் சுற்றி, இந்தியாவுக்கு மேலே ஒரு புள்ளிபோல நிலையாக நின்று 24 மணி நேரமும் கண்காணிக்கும்.
எனவேதான் இந்தச் செயற்கைக்கோளை இந்தியாவின் 3-வது கண் என்று விஞ்ஞானிகள் மெச்சுகிறார்கள். வங்காள விரிகுடா அல்லது அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் அந்த வினாடியில் இருந்தே, இதன் கேமராக்கள் படம் பிடிக்கும் பணியைத் தொடங்கிவிடும். புயலின் தீவிரம், காற்றின் திசை, அது எங்கு கரையைத் தொடும் என்பதையும் கண் சிமிட்டும் நேரத்தில் படம் பிடித்து, தரையில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். இமயமலைப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் மேக வெடிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, உடனுக்குடன் எச்சரிக்கையையும் விடுக்கும். இதேபோல, இமயமலையில் பனிச்சரிவு ஏற்பட்டாலும் அதையும் முன்கூட்டியே தெரிவிக்கும். மேலும், காட்டுத்தீ பரவும் வேகம், அது எந்தத் திசை நோக்கி நகரும் என்பதையும் வனத்துறைக்குத் தொடர்ந்து தகவல் அனுப்பிக்கொண்டிருக்கும்.
நாட்டின் பாதுகாப்பிலும், குறிப்பாக எல்லைப் பாதுகாப்பிலும், இந்த 3-வது கண் முக்கியப் பங்காற்றும். மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், புதிய கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றையும் இடைவிடாமல் கண்காணிக்கும். கடந்த காலங்களில் வயநாடு, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் மேக வெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு போன்ற துயரச் சம்பவங்களை யாரும் மறந்துவிட முடியாது. இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுப்பதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளையும், பெரும் சேதங்களையும் தவிர்க்க இந்த 3-வது கண் உதவும். இரவு-பகல் பாராமல் 24 மணி நேரமும் இந்தியாவைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் இந்த 3-வது கண்ணை 'சூப்பர் பாய் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் வர்ணித்திருப்பது மிகவும் பொருத்தமானது.