தமிழ்நாடு ஒரு ஆன்மிக பூமி. இதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறுகளை சுமந்துகொண்டு விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் கோவில்களே சாட்சி. நமது மூதாதையர்கள் குறிப்பாக மன்னர்கள், மக்களிடம் ஒற்றுமை என்ற கருத்தை விதைப்பதற்காக நிறைய கோவில்களைக் கட்டி எழுப்பியிருக்கிறார்கள்.
மக்களும் கோவிலை சார்ந்து நெறிபாட்டுடன் தங்களது வாழ்க்கைமுறையை கட்டமைத்தனர். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 43,728 கோவில்கள் உள்ளன. முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து கோவில்களில் அன்றாட பூஜைகள், திருப்பணிகள், கும்பாபிஷேகம் என ஒவ்வொரு விழாக்களையும் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செய்துவருகிறது.
'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்ற திருக்குறளுக்கேற்ப இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக எப்போதும் பக்தி பழமாக வெண் தாடியுடன் வலம் வரும் சேகர்பாபுவை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். அவரும் கோவில்களில் பூஜைகள் ஆகம விதிப்படி நடக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறார்.
கோவில்களில் வருமானம் உள்ள கோவில்களில் தினமும் 5 கால பூஜைகள், முக்கால பூஜைகள் நடக்கின்றன. ஆனால் சிறிய கோவில்களில் வருமானம் இல்லாததால் ஒருகால பூஜை கூட நடக்காமல் அங்கு வீற்றிருக்கும் தெய்வங்களை மக்கள் முறையாக வழிபடமுடியாத நிலை இருந்தது.
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில், யாரும் கவனிக்காமல் பூஜைகளும் நடக்காமல் இருந்த சிறிய கோவில்களில் ஒருகால பூஜையாவது நடக்கவேண்டும் என்பதற்காக 12 ஆயிரத்து 959 கோவில்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வைப்பு நிதி போட்டு, அதில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து ஒருகால பூஜை நடத்த ஏற்பாடு செய்தார். பின்பு இந்த தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றப்பிறகு கோவில்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்த்தப்பட்டு ஒருகால பூஜைக்கான வைப்பு நிதி முதலில் ரூ.2 லட்சமாகவும் பின்பு ரூ.2.5 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்து இந்த கோவில்களின் எண்ணிக்கை 19 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஆக இந்த கோவில்களுக்கும் ஒருகால பூஜை நடப்பதற்கு தேவையான பூஜை உபகரணங்களாக 3 கிண்ணங்கள் கொண்ட சொம்பு, தூபக்கால், மணி, காமாட்சி விளக்கு மற்றும் பஞ்ச பாத்திரம் ஆகியவை முதல்-அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் இந்த கோவில்களில் ஒருகால பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கோவில்களில் மின் கட்டணத்தையும் இந்து சமய அறநிலையத்துறையே கட்டுகிறது. மேலும் ஒருகால பூஜை நடக்கும் கோவில்களின் அர்ச்சகர்கள் குழந்தைகள் உயர் கல்வி பெற தலா ரூ.10 ஆயிரம் வீதம் 1,500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆக தமிழ்நாட்டில் அனைத்து கோவில்களிலும் ஒருகால பூஜையாவது நடந்து, அங்கு வீற்றிருக்கும் கடவுள்களுக்கு முறைப்படி வழிபாடு நடக்கவும், இஷ்ட தெய்வங்கள் மனம் குளிர்ந்து பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றவும் கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டுள்ளன. கோவில் மணி ஒலித்து, தெய்வங்களை ஆராதிக்கும் தீபம், மனம் உருக வேண்டும் பக்தர்களின் வேண்டுதல்களை பூர்த்தி செய்ய சுடர் விட்டு பிரகாசிக்கும். பொதுவாக கோவில்களின் பராமரிப்பு ஆன்மிக பெரியோர்கள், மடாதிபதிகள் பொறுப்பில் இருக்கவேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.