தலையங்கம்

மாநில அரசுக்கு நிதி சுமையா?

மன்மோகன்சிங் தலைமையிலான அரசாங்கத்துக்கு பெருமை தேடித்தந்த திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று கூறப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்.

மன்மோகன்சிங் தலைமையிலான அரசாங்கத்துக்கு பெருமை தேடித்தந்த திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று கூறப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம். உரிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 2-2-2006-ல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது. கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்குவதற்கு உறுதி செய்யும் திட்டம்தான் இது.

திறன் தேவைப்படாத உடலுழைப்பு மூலம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் இது. ஆரம்பத்தில் ஒருநாள் கூலி ரூ.100 என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், படிப்படியாக இந்த கூலித்தொகை உயர்த்தப்பட்டு, இப்போது தமிழ்நாட்டில் ஒருநாள் கூலியாக ரூ.282 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் இரட்டிப்பு பயன்கள் கிடைக்கின்றன. முதலாவதாக, கிராமப்புறங்களில் உள்ள குடும்பத்தினருக்கு வறுமை ஏற்படாத வகையில், வேலைவாய்ப்பு அளிக்கிறது. அடுத்து அவர்கள் செய்யும் வேலையின் மூலம் தரமான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. கொரோனாவால் வேலைவாய்ப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், ஏராளமானோர் நகர்ப்புறங்களை விட்டு கிராமப்புறங்களுக்கு தஞ்சம் தேடி சென்றனர். அங்கு அவர்களுக்கு வாழ்வளித்தது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்தான். மழை, வறட்சி இருக்கும் நேரங்களில், கிராமப்புறங்களில் விவசாய வேலைகள் இல்லாத நேரத்தில் இந்த 100 நாள் வேலை திட்டம்தான், அங்குள்ள மக்களுக்கு ஒரு இன்சூரன்சு போல வாழ்வளிக்கிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கான ஒதுக்கீடு குறைந்து கொண்டே இருந்தது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை கடந்த 8 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகையைவிட குறைவான தொகையாகும். இந்த நிதி ஆண்டில் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு தொகை ரூ.89,400 கோடியாக இருக்க, இப்போது பட்ஜெட்டில் 33 சதவீத தொகை குறைக்கப்பட்டு, ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற ஊரக திட்டங்களுக்கு ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால், அந்த திட்டங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அரசாங்கம் கூறினாலும், இந்த திட்டம் என்பது ஒரு உறுதி அளிக்கும் திட்டம்.

இப்போது மற்றொரு பாதிப்பை மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை மந்திரி கிரிராஜ்சிங் அறிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் 100 சதவீதமும் மத்திய அரசாங்கத்தாலேயே வழங்கப்படுகிறது. இந்த திட்ட பணிகளுக்கான தளவாட சாமான்கள் மற்றும் தேவைப்படும் பொருட்களுக்கான செலவை மத்திய அரசாங்கமும், மாநில அரசும் 75:25 என்ற சதவீதத்தில், பகிர்ந்து கொள்ள வேண்டும். இப்போது, மத்திய மந்திரி இந்த கூலித்தொகையில் 60 சதவீதம் மத்திய அரசாங்கத்தின் பங்களிப்பும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பும் இருக்க வேண்டும். இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, மாநில அரசுகள் நிதிப் பற்றாக்குறையால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், பல திட்டங்களுக்காக மத்திய அரசாங்கத்திடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், மாநில அரசுகளின் மீது இந்த நிதி சுமையை சுமத்தினால் நிச்சயமாக தாங்க முடியாது. தற்போது நடைமுறையில் இருக்கும் பொருட்களுக்கான செலவில் 25 சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையே போதும்.

SCROLL FOR NEXT