இந்தியாவில் மாணவர்கள் எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். ஆனால் டெல்லியில் நடந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பின்னணியில் இளைஞர்களும், மாணவர்களும் நடத்திய போராட்டம் நாட்டிலேயே முதல் முறையாக மத்திய மந்திரியை பதவி இழக்க வைத்துவிட்டது. 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் ரெயில் விபத்தில் 150-க்கும் அதிகமான பயணிகள் உயிரிழந்ததை தொடர்ந்து அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த லால்பகதூர் சாஸ்திரி தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்தார். அதுபோல பல்வேறு காரணங்களுக்காக பல மத்திய மந்திரிகள் பதவியை துறந்திருக்கிறார்கள். ஆனால் மாணவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக யாரும் சமீப நாட்களுக்கு முன்பு வரை ராஜினாமா செய்தது இல்லை.
இந்த நிலையில், மாணவர்-இளைஞர்களின் போராட்டத்தின் விளைவால் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தள்ளப்பட்டார். இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் போராட்டக்காரர்களுடன் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும், சற்றும் பலனளிக்காததால் வேறு வழியில்லாமல் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதே தர்மேந்திர பிரதானின் வாழ்க்கை வரலாற்றை சற்று பின்னோக்கி பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவருடைய அரசியல் பயணமே அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்று சொல்லப்படும் பா.ஜனதாவின் மாணவர் அமைப்பில் இருந்துதான் தொடங்கியது. அந்த அமைப்பு சார்பில் அவர் 1996-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வு வினாத்தாள் கசிவை எதிர்த்து ஒடிசாவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பின்னணியில் பா.ஜனதா சார்பில் பல்லஹாரா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஒடிசாவின் பா.ஜனதா 'யுவ மோர்ச்சா' என்ற இளைஞர் அமைப்பின் தலைவர் ஆனார். தொடர்ந்து 2002-ம் ஆண்டு பா.ஜனதா தேசிய செயலாளராக உயர்ந்த அவர், பா.ஜனதா 'யுவ மோர்ச்சா' தேசிய தலைவராக உயர்ந்தார். பின்பு பா.ஜனதாவில் தீவிர பங்காற்றிய அவர், 2014-ல் பீகார் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அப்போது 40 இடங்களில் 31-ல் வெற்றி கனிகளை பறித்துக் கொடுத்தார். 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடியின் மந்திரி சபையில் மந்திரியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்தார். இப்போது கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் அன்று இதேபோல் ஒரு வினாத்தாள் கசிவுக்காக மிகப்பெரிய போராட்டத்தை ஒடிசாவில் நடத்தியவர். இன்று அதே வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தன்னுடைய பதவியையே இழந்துள்ளார்.
அவர் ராஜினாமா செய்தவுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தன்னுடைய சமூகவலைதளத்தில். "ஜனநாயகம் வென்றது. மகாத்மா காந்தி, அம்பேத்கர் வென்றார்கள்" என்று பதிவிட்டு நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடியது. பா.ஜனதாவை எதிர்ப்பவர்கள் யாரும் இல்லை என்று ஒட்டுமொத்த இந்தியாவும் நினைத்திருந்த நேரத்தில், மாணவர்-இளைஞர்கள் பட்டாளம் இதோ நாங்கள் இருக்கிறோம் என்று அடையாளம் காட்டியிருக்கிறார்கள். டெல்லி மட்டுமல்ல நாடு முழுவதும் அவர்களுடைய போராட்ட தீ பரவியதால், தங்களுக்கு எதிராக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் மந்திரி சபையில் இருந்து தர்மேந்திர பிரதானை பா.ஜனதா கழற்றிவிட்டுள்ளது. அவர் ராஜினாமா செய்ய நினைத்திருந்தால், வினாத்தாள் கசிவு விவகாரம் வெளியே வந்ததும் அதற்கான முடிவை எடுத்திருப்பார். போராட்ட அலை ஓயாமல் சுனாமியாக சுழன்று அடித்ததால், அதன் வீரியத்தை தாங்கமுடியாமல் பா.ஜனதா அவரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டது.