தலையங்கம்

தாய் மாமன்தான் வாராரு; தங்க மோதிரம் தாராரு!

இதனை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.755.83 கோடி அரசு ஒதுக்குகிறது.

மனித வாழ்க்கையில் தாய், தந்தைக்கு அடுத்து முக்கியமானது தாய்மாமன் உறவுதான். தாயின் அன்பு, தந்தையின் அரவணைப்பு ஆகியவற்றை ஒருங்கே பெற்ற வியப்பு என்று தாய்மாமனை கூறலாம். நடை பழகியதும் பிஞ்சு கரம் பிடித்து பிரபஞ்சத்தை அறிமுகப்படுத்தும் மீசை முளைத்த முதல் தோழனும் அவர்தான். தமிழர் பண்பாட்டில் குழந்தை பிறந்ததிலிருந்து, அது வளர்ந்து திருமணம் செய்து குழந்தை பெறும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் தாய்மாமனின் சீரும், பங்கும் முக்கிய இடத்தை அலங்கரிக்கிறது. சகோதரிக்கு குழந்தை பிறந்தவுடனேயே தாய்மாமன் செய்யவேண்டிய சீர் தொடங்கிவிடுகிறது. அந்த குழந்தைக்கு மொட்டை அடிக்கும்போதும், காது குத்தும்போதும் தாய்மாமன் மடியில் உட்காரவைத்து செய்வது என தாய்மாமன் சடங்கின் பட்டியல் நீள்கிறது.

அந்த காலங்களில் போருக்கு செல்லும் வீரர்கள், தங்கள் மனைவியையும், குழந்தைகளையும் மனைவியின் அண்ணன் அல்லது தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு களம் காண்பார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஏனெனில் போருக்கு செல்லும் வீரர்கள் திரும்பி வரும்வரை அல்லது ஒருவேளை வீரமரணம் அடைந்துவிட்டாலும், அந்த குடும்பத்தை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பை தாய்மாமனே சுமக்கிறார். இதுவே தாய்மாமன் உறவுக்கு தமிழர்கள் அளித்துள்ள முக்கியத்துவத்தின் வரலாற்று பின்னணியாகும். பிறந்த குழந்தைக்கான தாய்மாமன் சீர் பற்றி கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து எழுதிய, "தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி, அவன் தங்கக் கொலுசு கொண்டுவந்து தாராண்டி" என்ற பாடலில், தாய்மாமன் தனது சகோதரிக்கு பிறந்த குழந்தைக்கு என்னென்ன சீர் கொண்டுவருகிறார் என்பதை இசையுடன் இணைந்த கவிதை வரிகளில் அழகாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

அந்தவகையில், முதல்-அமைச்சர் விஜய் தனது தேர்தல் அறிக்கையில், "அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆட்சி பொறுப்பேற்ற 43-வது நாளிலேயே, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுவிட்டார். அந்த அரசாணையின்படி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த தாய்மார்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு, முதல்-அமைச்சரின் "தாய்மாமன் தங்கமோதிர திட்டம்” மூலம் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். ஒரு தாய் எத்தனை குழந்தைகள் ஈன்றெடுத்தாலும் தங்க மோதிரம் உண்டு. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 4.42 லட்சம் குழந்தைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கின்றனர். இந்த குழந்தைகள் அனைவருக்கும், "தாய்மாமன்தான் வாராரு; தங்கமோதிரம் தாராரு" என்ற வகையில், பிறந்தவுடனேயே, முதல்-அமைச்சர் விஜய்யின் தாய்மாமன் சீராக தங்க மோதிரத்துடன் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கிறது.

இதனை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.755.83 கோடி அரசு ஒதுக்குகிறது. இதற்காக அரசு ஆஸ்பத்திரிகளிலேயே தங்க மோதிரங்கள் இருப்பு வைக்கப்படும். ஆண், பெண் பாகுபாடின்றி இரு பாலின குழந்தைகளுக்கும் தாய்மாமனின் அன்பு சின்னமாக தங்கமோதிரம் வழங்கப்படும். தாய்மாமன் சீர் என்ற நூற்றாண்டுகள் பழமையான தமிழர் பண்பாட்டு மரபை, அரசின் நலத்திட்டமாக மாற்றியிருப்பதே இந்த திட்டத்தின் தனிச்சிறப்பாகும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அரசே, தாயின் மறுஉருவமான தாய்மாமனாக நின்று தங்கமோதிரம் அணிவிக்கிறது. இதனால் பிஞ்சு விரல்கள் இனி தங்கத்தால் மின்னும். இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி முதல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.