காலை கண் விழிப்பதில் தொடங்கி, இரவு உறங்கும்வரை நம் விரல் நுனியிலும், இதயத்தின் அருகிலும் நீங்காமல் இருக்கும் ஒரேபொருள் என்றால் அது நம்முடைய செல்லச் 'செல்போன்'தான். வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்கள் முதலில் எந்த பொருளை கையில் எடுக்கிறார்களோ இல்லையோ. செல்போனை எடுக்க மறப்பதில்லை. அந்த அளவுக்கு அது நம்வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது. இப்படி வாழ்வில் ஒன்றாகிவிட்ட இந்த செல்போனில் வரும் சில வேண்டாத தொல்லைத்தரும் தேவையற்ற அழைப்புகளால் பிரச்சினைகளையும், சிக்கல்களையும் சந்திக்கவேண்டிய நிலை இருக்கத்தான் செய்கிறது.
இப்போதெல்லாம் சைபர் குற்றங்கள் செல்போன்மூலம் அரங்கேறுவது மிக அதிகமாகிவிட்டது. வங்கிகள், காவல்துறை, அரசு அலுவலகங்களில் இருந்து பேசுவதாகவும் மோசடி அழைப்புகள் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதோடு, நம்பத்தகுந்த வகையில் லாவகமாக பேசி சேமிப்பிலிருக்கும் பணம் முழுவதையும் ஒரு நொடியில் காலிசெய்து சுத்தமாக துடைத்துவிடுகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் கைது என்ற புதுவார்த்தையை பயன்படுத்தி பெரியளவில் செய்யப்படும் பணமோசடிகளுக்கு மெத்தப்படித்தவர்கள்கூட இரையாகிவிடுகிறார்கள். தெரியாத எண்களில் இருந்து மட்டுமல்லாமல், பெரிய தொல்லையாக இருக்கும் நன்றாக தெரிந்த நபர்கள் மற்றும் தவிர்க்க வேண்டியவர்களின் அழைப்புகள்கூட செல்போனில் 'ஈ' போல மொய்க்கின்றன. 'ரிங்' அடித்ததும் அந்த அழைப்புகளை எடுத்து தேவையில்லாத மனஉளைச்சலையும் சந்திக்கவேண்டிய நிலைதான் இருக்கிறது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம், செல்போனில் சேமித்து வைக்கப்பட்ட எண்களை தாண்டி புதிய நம்பர்களில் இருந்துவரும் தெரியாத அழைப்புகள்தான். புதிய நம்பரை எடுக்காமல்விட்டால், சில முக்கிய அழைப்புகளும் தவறிவிடுகின்றன. இதற்காக அந்த நம்பர் யாருடையது என கண்டறிய 'டுரூ காலர்' என்ற செயலியும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனாலும் இதனை பயன்படுத்த பிரிமீயம் முறையில் கட்டணம் செலுத்தவேண்டிய சூழல் உள்ளது.
இதற்கெல்லாம் தீர்வாக நவம்பர் 1-ந்தேதியிலிருந்து அழைப்பவரின் எண்ணுடன் சம்பந்தப்பட்டவரின் பெயரையும் 4ஜி, 5ஜி செல்போனின் திரையில் காட்டும் புதிய வசதியை தொலைத்தொடர்புத்துறை, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் செய்துகொடுக்க அறிவுறுத்தியுள்ளது. இனி தெரியாத எண்ணில் இருந்து அழைப்புவந்தால் யார் பேசுகிறார்கள்? என்று தெரிந்துகொள்ள திணறவேண்டியது இருக்காது. 'டுரூ' காலர் செயலியில் சென்றுபார்த்து யார் என அறிந்துகொள்ளவேண்டிய அவசியமும் இருக்காது. செல்போனில் 'ரிங்' அடிக்கும்போதே அழைப்பவரின் எண்ணுடன் பெயரை திரையில் காட்டும். இதன்முலம் தேவையற்ற அழைப்புகள், விளம்பர அழைப்புகள், மோசடி முயற்சிகளை கண்டறிந்து அவற்றிற்கு பதிலளிப்பதை தவிர்த்துவிடமுடியும். 'காலிங் நேம் பிரசெண்டேஷன்” என்று அழைக்கப்படும் இந்த பெயரை காண்பிக்கும் சேவையை செல்போன் சந்தாதாரர்கள் பெறுவதற்கு தனியாக கோரிக்கை வைக்கவேண்டிய அவசியம் கிடையாது.
அந்தந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களே சேவையை வழங்கிவிடும். 'காண்டக்ட் லிஸ்டில்' அழைப்பவரின் பெயர் இருந்தால் அந்த பெயர் திரையில்தோன்றும். அதில் இல்லாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்களால் பராமரிக்கப்படும் சந்தாதாரர் பதிவுகளிலிருந்து பெயர் எடுக்கப்பட்டு திரையில் காட்டப்படும். அதுவே சர்வதேச எண்களிலிருந்து வந்தால், அதை 'சர்வதேச அழைப்பு' என்று காட்டும்.
இந்த வசதிக்காக பயனாளர்கள் தனியாக கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பாகும். 2ஜி, 3ஜி மற்றும் கம்பிவழி தொலைபேசிகளிலும் இதேவசதியை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவித்திருப்பதும் வரவேற்புக்குரியது. மொத்தத்தில் இனி செல்போன் 'ரிங்' அடித்தால் யார் பேசுகிறார்கள் என்று தெரியாமல். “ஹலோ” என்று சொல்லவேண்டிய தேவையோ, மோசடி அழைப்புகளா, தொல்லைதரும் அழைப்புகளா என்று பதற்றத்துடன் குழம்பிக்கொண்டே செல்போன் அழைப்புகளை எடுக்கும் நிர்ப்பந்தமோ இல்லை.