தலையங்கம்

பார்த்தால் கன்றுக்குட்டி; பாய்ந்தால் முரட்டுக்காளை

12 வயதில் கிரிக்கெட் களத்துக்குள் நுழைந்த சூர்யவன்ஷி, எண்ணற்ற சாதனைகளைப் படைத்துவிட்டார்.

வைபவ் சூர்யவன்ஷி! இதுதான் இப்போது கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் உச்சரிக்கும் ஒரே பெயர். அவருக்கு வயது 15 தான் ஆகிறது. 10-ம் வகுப்புதான் படிக்கிறார். பார்த்தால் சுட்டியான குட்டி பையன். அதாவது தோற்றத்தில் கன்றுக்குட்டி போலத்தான் சாதுவாக காட்சியளிப்பார். ஆனால் கிரிக்கெட் மைதானத்தில் இறங்கிவிட்டால் யாராலும் அடக்க முடியாத கட்டவிழ்த்துவிட்ட முரட்டுக் காளையாக மாறிவிடுவார்.

சீறி வரும் பந்துகளை எல்லைக் கோடுகளை தாண்டி சிக்சராக தெறிக்கவிடுவதில் வல்லவர் என்பதால், அவருக்கு பந்து வீசுபவர்களின் நிலைமை திண்டாட்டம்தான். அனுபவமிக்க எவ்வளவு பெரிய பந்து வீச்சாளர்களாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு வேகத்தில் வீசினாலும் சர்வசாதாரணமாக பந்தை ஆகாயமார்க்கமாக தொடுவானை முட்ட வைப்பவர்.

அவரது பேட்டில் மோதும் பந்து பெரும்பாலும் சிக்சரில் போய்தான் விழும். அதனால்தான் அவரை ரசிகர்கள் சிக்சர் ராஜா, பீகாரின் கெய்ல் என்று செல்லமாக அழைக்கிறார்கள். 12 வயதில் கிரிக்கெட் களத்துக்குள் நுழைந்த சூர்யவன்ஷி இளையோர் டெஸ்டில் குறைந்த வயதில் சதம், ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் ஒரே சீசனில் 72 சிக்சர்கள் அடித்த வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் அரை சதம் என்பது உள்பட எண்ணற்ற சாதனைகளை படைத்துவிட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தோகாவில் நடந்து வந்த வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதாவது ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கப் போட்டியில் வெறும் 28 பந்தில் சதம் அடித்து சாதனை புரிந்ததோடு, 52 பந்துகளில் இரட்டை சதம் என்று 200 ரன்களை குவித்து விட்டார். இதற்கு முன்பு 29 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

இவருடைய சாதனைக்கு அடுத்த இடத்தில் உள்ள நியூசிலாந்து நாட்டின் சாட் போவ்ஸ் எதிர்கொண்ட பந்துகள் ஒரு மடங்கு அதிகம். அதாவது அவர் அந்த ரன்களை அடிக்க எதிர்கொண்ட பந்துகள் 103 ஆகும். சூர்யவன்ஷியின் இன்னொரு சாதனை இந்த போட்டியில் அவர் 28 சிக்சர்கள் விளாசியது ஆகும். அவரது பேட்டிங் எல்லாம் சரவெடி பேட்டிங் ஆக இருந்தது.

இதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் 40 பந்துகளில் 150 ரன்களை கடந்ததும் மற்றொரு சாதனையாகும். தொழில்முறை கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசியவர் இவர்தான். இந்த சாதனைகள் மட்டுமல்லாமல், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் 15 வயதான சூர்யவன்ஷிக்கு கிடைத்துள்ளது.

மேலும் லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் இவரிடம்தான் உள்ளது. இந்த ஆட்டத்தில் அவரது ஸ்டிரைக் ரேட் 384.90 ஆகும். ஆக இந்த ஒரு நாள் ஆட்டத்தில் 6 சாதனைகளை முத்திரையாக பதித்த சூர்யவன்ஷி, சாதனையே உன் பெயர்தான் சூர்யவன்ஷியா என்று கேட்கும் அளவுக்கு புகழ் மணிமகுடத்தில் ஏறி அமர்ந்திருக்கிறார்.

இடைவிடாத முயற்சியால் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கும், அவர் இந்திய அணியின் முழுநேர வீரராக இடம் பெறும்போது இன்னும் எவ்வளவு உலக சாதனைகளை தகர்க்கப்போகிறாரோ என்று இந்தியா ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் கவுரவமாக கருதப்படும் சூர்யவன்ஷியின் திறமை மிகுந்த சாதனைகள், ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை.

SCROLL FOR NEXT