வாழ்க்கைமுறை மாற்றங்களால் தொற்றிக்கொள்ளும் நோய்களுக்காக டாக்டர்களும், உடல் ஆரோக்கியத்துக்கு வழிமுறை சொல்லும் நிபுணர்களும் முதல் அறிவுரையாக கூறுவது நடைபயிற்சி செல்லுங்கள் என்பதுதான். இலக்கணத்துக்கு எப்படி நடை முக்கியமோ, அதுபோல மனிதனுக்கும் நடை முக்கியம். ஆக, நடைபயிற்சி என்பது இளம் பிஞ்சுகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. இதனால் காலையிலும், மாலையிலும் ஏராளமானவர்கள் நடைபயிற்சி செல்வதை பரவலாக பார்க்கமுடிகிறது. ஆனால் தெளிந்த மனதோடு நடைபயிற்சி செல்லவேண்டியவர்கள் நாய் தொல்லையால் இப்போது ஒவ்வொரு அடியையும் பதற்றத்துடனேயே எடுத்து வைக்கவேண்டியது இருக்கிறது. எந்த பக்கத்தில் இருந்து தெரு நாய்கள் பாய்ந்து கடிக்க வருமோ என்று பயந்துகொண்டே நாலாபக்கமும் உற்று நோக்கிக்கொண்டே செல்கிறார்கள்.
நடைபயிற்சி செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்களில் செல்பவர்களுக்கும் நாய்களால் அச்சுறுத்தல் இருக்கிறது. நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகள் தொடரப்பட்டும், தாங்களாகவே முன்வந்து நீதிமன்றங்கள் வழக்கு தொடர்ந்து தீர்ப்புகள் பல வழங்கப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையால் தெரு நாய்களின் ஆதிக்கமே தொடர்ந்து வருகிறது. தெரு நாய்களின் ஆக்ரோஷமான குரைப்பு சத்தம் எல்லோருக்கும் கேட்கும் நிலையில், யாருக்கு கேட்கவேண்டுமோ அந்த அதிகாரிகளின் காதில் விழவில்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. தெரு நாய்களின் நடமாட்டம் சாலைகள், கடற்கரைகள், விளையாட்டு மைதானங்களில் மட்டுமல்லாமல் ரெயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தலைமைச்செயலகம், ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்கள் என்று எல்லா இடங்களிலும் பரவி இப்போது உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள விமான நிலைய வளாகத்துக்கும் சென்றுவிட்டது.
கடந்த 13-ந்தேதி மாலை மலர் பத்திரிகையில், சென்னையில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் உள்பட விமான நிலைய வளாகம் முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், அவற்றின் அட்டகாசங்களும் அதிகரித்துவிட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. பயணிகளை விரட்டுவதோடு மட்டுமல்லாமல் அவைகளுக்குள்ளும் அவ்வப்போது சண்டை போட்டுக்கொண்டு விமான நிலையத்துக்கு வரும் பயணிகளையும், விமான நிலைய ஊழியர்களையும் துரத்துகின்றன என்று செய்தி வெளியிட்டு, விமான நிலைய வளாகத்தில் சர்வ சுதந்திரத்துடன் சுற்றித்திரியும் நாய்களின் படமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 'ரன் வே'-க்கு செல்லவேண்டியவர்கள் நாய் தொல்லையால் 'ரன் அவே' என தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்து வருகிறார்கள்.
அதேநாளில் தினத்தந்தியில், கடந்த ஓராண்டில் அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை தமிழகத்தில் நாய்க்கடியால் 7 லட்சத்து 53 ஆயிரத்து 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதுபோல இந்த ஒரு ஆண்டில் மட்டும் நாய் கடித்து ரேபிஸ் நோயினால் 40 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் செய்தி வெளிவந்திருந்தது. இதுமட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 12 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திருப்பூர் மாவட்டம் கோட்டை மூலனூரில் தெருநாய்கள் கடித்ததால் 14 ஆடுகள் செத்தன. தமிழ்நாட்டில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்களும், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களும் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆக, தெரு நாய்கள் விஷயத்தில் இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குறை இருக்கிறது. புதிய அரசு இதில் தீவிர நடவடிக்கை எடுத்து மக்களை பயமின்றி வெளியே நடக்க வழிவகை செய்யவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.