உலகில் ஒவ்வொரு கால கட்டத்திலும் முத்திரை பதிக்கும் கண்டுபிடிப்புகள் கோலோச்சுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகில் புது வரவாக வந்த கம்ப்யூட்டரும், இணையதள வசதியும் மனிதனின் அன்றாட செயல்பாடுகளே இனி இதை சார்ந்துதான் இருக்கும் என்ற நிலையை உருவாக்கின. உலகம் கம்ப்யூட்டருக்குள் வந்து விட்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே. கைக்குள்ளேயே உலகத்தைக் கொண்டு வந்துவிடலாம் என்ற அளவில் செல்போன் வந்தது. இது அற்புதமான கண்டுபிடிப்பு என்று பெருமைப்பட்டுக்கொண்டு இருந்த நேரத்தில், 'நானே வருவேன்' என்று செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வந்து விட்டது. அது இல்லாத துறையே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.
இதனால் வேலை இழப்புகள் ஏற்பட்டு விடும். எண்ணற்றோர் வேலை இழந்து வீதிக்கு வந்துவிடுவார்களோ? என்று உலகமே அச்சப்பட்டுக்கொண்டு இருந்த நேரத்தில் இது அதிகளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நல்ல செய்திகளும் கிடைத்துள்ளன. செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை மேம்படுத்தவும், அதன் செயல்பாட்டை பரவலாக்கவும் நிபுணர்கள் கூடி ஆராய்வதற்காக உலக அளவில் முதல் உச்சி மாநாடு கடந்த 2023-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பிளட்சலி பூங்காவில் நடந்தது. 2024-ம் ஆண்டு தென்கொரியாவின் சியோலிலும், 2025-ம் ஆண்டு மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும் நடந்தது. அந்தவகையில், 4-வது உச்சி மாநாட்டின் தொடக்க விழா டெல்லி பாரத மண்டபத்தில் நாளை காலையில் நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டின் முன்னோட்டமாக பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி கண்காட்சியை தொடங்கி வைத்தார். டெல்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள். 45 நாடுகளை சேர்ந்த மந்திரிகள், தொழில்நுட்ப ஜாம்பவான்களான 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டின் கருப்பொருள் 'அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி' என்பதாகும். இந்த மாநாடு வெறும் பேச்சோடு கூடிக் கலைந்தோம் என்று இல்லாமல் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு "மக்கள், பூமி, வளர்ச்சி" என்ற 3 சூத்திரங்கள் மற்றும் “மனித மூலதனம், சமூக அதிகாரம், பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு, அறிவியல், திறன், ஜனநாயகப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி" ஆகிய 7 தத்துவங்களின் அடிப்படையில் புதிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இந்த மாநாட்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட வரைவு தயாரிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. மேலும் போலி வீடியோக்களை தடுக்க 30 நாடுகளுடன் இணைந்து தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை முன்னெடுக்க இந்தியா முனைப்புடன் இருக்கிறது. மிக முக்கியமாக 'பாரத் ஜென்' என்ற இந்தியாவின் புதிய செயற்கை நுண்ணறிவின் மொழி மாதிரி, அதாவது எல்.எல்.எம். வெளியிடப்படுகிறது. இதனை இந்தியாவின் 22 மொழிகளில் பயன்படுத்தலாம். இந்த உச்சி மாநாடு இந்தியாவை செயற்கை நுண்ணறிவில் உச்சத்துக்கு கொண்டு போய்விடும். அதோடு தமிழ்நாட்டில் பல ஏ.ஐ. டேட்டா சென்டர்களை கொண்டு வர வாசலை திறந்து வைக்கும். எப்படி செமிகண்டக்டரை தயாரிப்பதற்கு தைவான் நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்வதற்காக, 1974-ல் 10-க்கும் குறைவான என்ஜினீயர்கள் ஒரு காலை உணவு கூட்டத்தில் கூடி திட்டமிட்டார்களோ, அதுபோல டெல்லியில் நடக்கும் உச்சி மாநாடும், பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழியைக் காட்டும்.