டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வுபெறுவதாக கடந்த 17-ந்தேதி அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டுக்கு என்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆண். பெண், சிறியவர்கள். பெரியவர்கள், பணக்காரர்கள், பாமரர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த பாகுபாடும் கிடையாது. கிரிக்கெட் சீசன் வந்துவிட்டால் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு பெருங்கூட்டம் ஆன்லைனில் கதவுகளை தட்டும். நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் செல்போனே கதி என்றும், பத்திரிகையில் வரும் செய்திகளை வரி விடாமல் வாசிப்பதற்கும் முழு நேரத்தை செலவிடுவார்கள். கிரிக்கெட் வீரர்களில் தமிழக மக்களின் கனவு நாயகன் என்றால், மஞ்சள் படைக்கு தலைவனாக இருந்த டோனிதான். தல... என்று தமிழக கிரிக்கெட் ஆர்வலர்கள் அவரை செல்லமாக அழைத்து வருகின்றனர்.
ஜார்கண்டில் பிறந்தாலும் தமிழகத்தின் செல்லப்பிள்ளையாகவே அவர் வலம் வந்தார். டோனியையும், கிரிக்கெட்டையும் அவர்கள் பிரித்து பார்ப்பதில்லை. அதனால்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடியபோது போட்டிருந்த 7-ம் எண் பொறித்த மஞ்சள் ஜெர்சியை அணிவதில் தமிழக ரசிகர்களுக்கு ஒரு அலாதி பிரியம். அப்படி டோனியை தமிழக மக்கள் தங்கத்துக்கு நிகராக தங்களது இதயத்தில் வைத்து தாங்குகிறார்கள். அப்படிப்பட்ட டோனி தனது ஐ.பி.எல். கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வுபெறுகிறேன் என்று கடந்த 17-ந்தேதி அறிவித்தது பலருக்கும் இடி விழுந்ததுபோல அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது இமாலய இலக்கை துரத்தி பிடிக்கும் வேட்கையில் களம் இறங்கும் இந்திய அணி முதல் ஓவரிலேயே தொடக்க ஆட்டக்காரர்களை அடுத்தடுத்து பறிகொடுப்பதைவிடவும் கொடுமையானது. பிரிவுபசார போட்டியில் கலந்துகொள்ளாமல் இந்த அறிவிப்பு வெளியானது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.
2008-ம் ஆண்டு முதலாவது ஐ.பி.எல். தொடரின்போது அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன், அப்போதைய மதிப்பில் 15 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுத்தது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் இது இமாலய தொகையாகும். முதல் ஆட்டத்திலேயே அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த போட்டியில் சி.எஸ்.கே. அணி இறுதி போட்டி வரை முன்னேறியது மிகவும் பாராட்டை பெற்றது. அன்று முதல் இப்போது வரை சி.எஸ்.கே. அணியின் அடையாளமாகவே டோனி பார்க்கப்படுகிறார். 19 ஆண்டுகளாக அந்த அணியின் நட்சத்திரமாக களம் கண்டார். அவருடைய தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐ.பி.எல். கோப்பையை தன் வசமாக்கியிருக்கிறது.
ஐ.பி.எல். வரலாற்றிலேயே மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 2 அணிகள்தான் 5 முறை கோப்பையை வென்று இருக்கின்றன. அந்த 2 அணிகளின் கேப்டன்களாக இருந்தவர்களில் ஒருவர் ரோகித் சர்மா, மற்றொருவர் டோனி என்பது பெருமைக்குரியது. அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்ததும், அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்ற முதல் கேப்டன் என்ற மகுடத்தை சூடியவரும் டோனிதான். சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் வாகை சூடிய டோனி கிரிக்கெட் விளையாட்டில் சக்கரவர்த்தியாகவே திகழ்ந்தார். அவர் ஓய்வு பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடனான பந்தம் விட்டுப்போகவில்லை. இதுவரை களத்துக்கு வந்து பங்களிப்பு நல்கியவர், இனி வெளியில் இருந்து ஆலோசகராக பல டோனிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவார். ஆக கிரிக்கெட்டை விட்டு டோனியையும், டோனியை விட்டு கிரிக்கெட்டையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. கைகளால் பொத்தினாலும் தாழம்பூவின் வாசத்துக்கு தடை போடமுடியாது. அதுபோல கிரிக்கெட் உள்ளவரை டோனியின் புகழ் மணம் வீசிக்கொண்டே இருக்கும்.