தலையங்கம்

இனியும் அரசு நிர்ணயிக்கும் கட்டணம் அவசியம்தானா?

பல சேவைகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் பொருந்துவதில்லை என்பதால், இந்தக் கட்டண நிர்ணயம் அவசியமா? என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.

மக்கள் பயன்படுத்தும் பல்வேறு சேவைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் கட்டணங்களை நிர்ணயிக்கின்றன. மக்களுடைய வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அந்த சேவைகளுக்கு குறைவான கட்டணங்கள் இறுதி செய்யப்படுகின்றன. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இந்த கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் காற்றில் கலந்த கீதமாகி விடுகின்றன. ஏட்டளவில்தான் அந்தக் கட்டணம் இருக்கிறதே தவிர, நடைமுறையில் முறையாக பின்பற்றப்படுவது இல்லை. அரசுகள் நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

மக்களுக்கு குறைந்த செலவில் விமான சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக 'உதான்' விமான நிலையங்களை அரசு தொடங்குகிறது. அந்த விமான நிலையங்களுக்கு வந்து செல்லும் விமானங்களின் 50 சதவீத சீட்டுகளுக்கு மத்திய அரசால் அடிப்படைக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த சலுகை கட்டணத்திலேயே மக்கள் பயணம் செய்யலாம். இதற்காக விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட மத்திய அரசு மானியம் கொடுக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சேலம் விமான நிலையம் மட்டுமே இந்தப் பிரிவில் வருகிறது. மற்ற விமான நிலையங்களுக்கு வந்து செல்லும் விமானங்களுக்கு இந்தச் சலுகை கிடையாது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இண்டிகோ விமானம் தனது கட்டணத்தை எரிபொருள் கூடுதல் கட்டணம் என்ற பெயரில், உள்ளூர் விமானமாக இருந்தால் ரூ.425 முதல் ரூ.1,300 வரையும், வெளிநாடுகளுக்குச் செல்லும் சர்வதேச விமானமாக இருந்தால் ரூ.500 முதல் ரூ.10,000 வரையிலும் உயர்த்தியுள்ளது.

இதுபோல, ஆட்டோவில் 1.8 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்கு குறைந்தபட்சமாக ரூ.50-ம், இதற்கு மேல் பயணம் செய்யும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25-ம் கட்டணமாக தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்டோ மீட்டர் கட்டணம் இப்போது மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. புதிய கட்டணத்துக்கு ஏற்ப மீட்டரை மாற்றியமைக்க 6 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதால் இந்த புதிய கட்டணம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்தநிலையில் ஆட்டோ டிரைவர்களும் அரசு ஆணைப்படி, நிர்ணயிக்கப்பட்ட மீட்டர் கட்டணத்தை பயணிகளிடம் வாங்குவதில்லை. மாறாக ஆட்டோ டிரைவர்கள் சொல்லும் கட்டணத்தையே பயணிகள் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தியேட்டர்களில் சினிமா கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்கிறது. ஆனால், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ரிலீசான முதல் 3 நாட்களில் கூடுதல் கட்டணம்தான், அதாவது 10 முதல் 20 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முதல்-அமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக மருத்துவ சேவை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், மருத்துவ சேவைகளுக்கான கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான பெரிய தனியார் ஆஸ்பத்திரிகளில் அந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. இதுபோல, ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயித்து இருக்கிறது. ஆனாலும், தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்டதை தாண்டி பல மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அங்கு 'டிமாண்ட் அண்ட் சப்ளை' தத்துவம் நுழைந்து விடுகிறது. இப்படி பல சேவைகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் பொருந்துவதில்லை என்பதால், இந்தக் கட்டண நிர்ணயம் அவசியமா? என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.

SCROLL FOR NEXT