தலையங்கம்

திருப்தி அளிக்கிறதா விவசாயக் கடன் தள்ளுபடி?

எனது வாக்குறுதிகளை நிறைவேற்ற காலஅவகாசம் வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறியிருந்தார்.

பசிப்பிணி போக்கும் விவசாயம் லாபகரமானதாக இல்லை என்பது விவசாயிகளின் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது. இதனாலேயே, "உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்று சொல்கிறார்கள். விதைத்தல் முதல் அறுவடை வரையிலான பயிர் சாகுபடிக்கு தேவைப்படும் செலவுக்காக கூட்டுறவு வங்கிகளின் கதவுகளைத் தட்டி கடன் வாங்கியிருப்பதால், விவசாயிகள் பலரும் கடனாளியாகவே இருக்கிறார்கள். மகசூல் கிடைக்குமா? வங்கிக்கடனை முறையாக கட்டிவிடுவோமா? என்ற எண்ண ஓட்டத்திலேயே விவசாயிகளின் வாழ்க்கை சக்கரம் நகர்கிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட த.வெ.க. தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்களில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்' என்று கூறப்பட்டிருந்தது.

பொதுவாக விவசாயிகளில் 2.50 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் குறு விவசாயிகள் என்றும், 2.51 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள் சிறு விவசாயிகள் என்றும், அதற்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றவுடன், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் தாங்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர்.

ஆனால் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குறு விவசாயிகளுக்கு அதாவது 2.5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் வாங்கியிருந்த கடனில் ரூ.50 ஆயிரம் வரை 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். ரூ.50,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை வாங்கியுள்ளவர்களுக்கு ரூ.40 ஆயிரமும் என்று தொடங்கி பல்வேறு விகிதங்களிலும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்தால் ரூ.5 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல 2.51 ஏக்கருக்கு மேல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரையிலான கடனுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். அடுத்து ஒவ்வொரு ரூ.10 ஆயிரத்துக்கும் ஒவ்வொரு அளவு என்று கூறிவிட்டு ரூ.80 ஆயிரத்துக்கு மேல் கடன் வாங்கியிருந்தால் வெறும் ரூ.5 ஆயிரம் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்று விஜய் அறிவித்திருக்கிறார்.

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்ற கோரிக்கை விவசாய சங்கங்களிடம் இருந்தும், அரசியல் கட்சிகளிடம் இருந்தும் விடப்படுகிறது. ஆனால் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றபோதே அரசின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. எனது வாக்குறுதிகளை நிறைவேற்ற காலஅவகாசம் வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். ஆனாலும் இப்போது காலஅவகாசத்தை எதிர்பார்க்காமல் சட்டியில் இருப்பதை அகப்பையில் எடுத்து தட்டில் போடத் தொடங்கிவிட்டார். எனவே விவசாயிகளுக்கு பலன் அளிக்கக்கூடியதாக இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஓரளவுக்கு திருப்தி அளிக்கிறது என்றவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும். ஏனெனில் அவர் கேட்டுக்கொண்டபடி காலஅவகாசத்துக்காக காத்திருக்காமல் இப்போது முடிந்த அளவுக்கு தந்திருக்கிறார். நிதி நிலைமை சீரானவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி முழுமையாக வழங்குவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.