அமெரிக்கா-ஈரான் போரின் விளைவுகள் இந்தியாவையும் அசைத்துக்கொண்டு இருக்கிறது. இந்தியாவுக்கு தேவையான சமையல் கியாஸ் சிலிண்டரில் 60 சதவீதத்துக்கு மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த சிலிண்டர் எல்லாம் ஈரானுக்கு சொந்தமான ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் கப்பல்களில் கொண்டுவரமுடியும். ஆனால் இப்போது ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தடை செய்துவிட்டதால் கப்பல்கள் வர முடியவில்லை. பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் 4 கப்பல்கள் வந்தாலும், இது தொண்டை வறண்டு கடும் தாகத்தில் தவிப்பவனுக்கு ஒரு ஸ்பூன் தண்ணீர் கொடுப்பது போலத்தான் உள்ளது. ஒரு மாதத்துக்கு நமது தேவை 27.5 லட்சம் டன் சமையல் கியாஸ் ஆகும். அந்தவகையில், ஒரு நாளைக்கு நமது தேவை 89 ஆயிரம் டன் சமையல் கியாஸ். இப்போது 4 கப்பல்களிலும் வந்த கியாஸ் நமது 3 நாட்கள் தேவைக்கு கூட போதுமானது அல்ல.
வணிக சிலிண்டர்கள் வினியோகம் நிறுத்தப்பட்டு விட்டதால், ஓட்டல்கள் தினமும் மூடப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. வழக்கமாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலேயே பேசுவார். ஆனால் அவரும் இப்போதுள்ள சூழ்நிலையின் பாதிப்புகளை கொரோனா காலத்து பாதிப்பு சூழ்நிலையோடு ஒப்பிட்டு பேசியிருப்பதைப் பார்த்தால் நாட்டு மக்கள் நடப்பு நிலையை புரிந்து கொள்ளவேண்டும் என்ற உணர்விலேயே பேசியதாகத்தான் தெரிகிறது. பிரதமர் மோடி, மக்களவையில் பேசும்போது நிலைமையை புட்டுப் புட்டென்று வெள்ளிடை மலையாக விளக்கிவிட்டார். கடந்த 3 வாரங்களுக்கு மேலாக போய்க்கொண்டு இருக்கும் இடர்பாட்டு நிலை உலக பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்க்கையிலும் பாதகமான சூழலை உருவாக்கிவிட்டது.
சம்பந்தப்பட்ட நாடுகள் இதற்கு விரைவான தீர்வை காணும்படி உலகமே வலியுறுத்தி வருகிறது. இந்தியா இந்த போரில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் நாடுகளுடனும், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளுடனும் மிக விரிவான வர்த்தக தொடர்புகளைக் கொண்டு இருக்கிறது. இப்போது போர் நடந்துகொண்டு இருக்கும் இடங்கள்தான் உலகில் மற்ற நாடுகளோடு நாம் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான முக்கியமான வழியாகும். கச்சா எண்ணெய், கியாஸ், உரம் போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் பெரும் பகுதி ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இந்த நீரிணை வழியாக கப்பல்கள் வருவது மிகவும் சவாலாக இருக்கிறது. என்றாலும் நாட்டில் உள்ள சாதாரண குடும்பங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் வினியோகத்தில் குறைந்த இடர்பாடுகளை மட்டும் சந்திக்கும் வகையில் பெரிய பாதிப்புகள் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்கிறது.
இந்த போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சூழ்நிலைகள் இன்னும் நீண்ட காலத்துக்கு தொடரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா நேரத்தில் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டது போல, நாட்டு மக்கள் இதையும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள தயாரான நிலையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அனைத்து அரசுகளும், ஒவ்வொரு குடிமகனும் இந்த நேரத்தில் இணைந்து பயணிக்கும்போது எத்தகைய சூழலையும் நாம் சவாலாக ஏற்றுக்கொள்ள முடியும். இதுதான் நமது அடையாளம், இதுதான் நமது வலிமை என்று உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார். பிரதமர் மோடி கூறியபடி வரப்போகும் நாட்கள் மிகவும் சவால் மிகுந்த நாட்களாகத்தான் இருக்கும். அதை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். இதுதான் யதார்த்த நிலையாகும்.