தலையங்கம்

தமிழ்நாட்டில் பாதுகாப்பான சாலை பயணம் இல்லையா?

தமிழ்நாட்டில் மட்டும் 71 ஆயிரத்து 387 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை வசதிகளில் அதிக கவனம் செலுத்தும் நாம், சாலை பயணங்கள் பாதுகாப்பாக இருக்க இன்னும் அதிகமாக கவனம் செலுத்தவேண்டுமோ என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி நிதின் கட்கரி அளித்த பதிலில் இருந்து தெரிகிறது. சாலை விபத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நிதின் கட்கரி அளித்த பதில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்துகள்

இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் என்ற நிலை கடந்த பல ஆண்டுகளாகவே இருந்து வருவது மிகவும் கவலை அளிக்கும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் 'தினத்தந்தி' தலையங்கத்திலும், செய்திகளிலும் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறதே தவிர, விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை.

13.90 சதவீதம் தமிழ்நாட்டில்

கடந்த 2025-ம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்பட்ட சாலை விபத்துகள் மற்றும் அந்த விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் பட்டியல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் 2025-ம் ஆண்டிலும் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருக்கிறது.

நாடு முழுவதும் இந்த ஒரே ஆண்டில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 563 விபத்துகள் நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 71 ஆயிரத்து 387 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதாவது மொத்த விபத்துகளில் 13.90 சதவீதம் தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. சாலை விபத்துகளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 382 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 18 ஆயிரத்து 505 உயிரிழப்புகள் ஏற்பட்டு 2-வது இடத்தில் இருக்கிறது. ஆக மொத்த உயிரிழப்பில் தமிழ்நாட்டில் 10.09 சதவீதம் நடந்துள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை

உத்தரபிரதேசத்தில் சாலை விபத்துகள் 49 ஆயிரத்து 671 என்ற நிலை இருந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாட்டிலேயே உச்சத்தில் அதாவது 27 ஆயிரத்து 550 என்று பதிவாகியுள்ளது. நடப்பாண்டின் (2026) முதல் அரையாண்டில் தமிழ்நாட்டில் 37 ஆயிரத்து 292 விபத்துகளும், சென்னையில் 1,996 விபத்துகளும் நடந்திருக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் 9 ஆயிரத்து 461 பேரும், சென்னையில் 257 பேரும் மரணத்தை தழுவியுள்ளனர்.

அவசர மருத்துவ உதவி

இதற்கு காரணமாக அகில இந்திய மோட்டார் காங்கிரசின் முன்னாள் தலைவரான பால் மல்கித்சிங் கூறும்போது, "தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள் குறைவாக இருக்கிறது. இது மாநிலத்தில் சாலை கட்டமைப்பு, விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ உதவி சிறப்பாக செயல்படுவதை காட்டுகிறது. விபத்துகளை குறைக்க தமிழ்நாடு போக்குவரத்து மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தவேண்டும், வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதை தடுத்து விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

தீவிர நடவடிக்கை

சாலை போக்குவரத்தில் நிபுணத்துவம் பெற்ற சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியரும், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாலை பாதுகாப்பு ஆய்வு மைய தலைவருமான வெங்கடேஷ் பாலசுப்பிரமணியன், தமிழ்நாட்டில் அனைத்து வகை விபத்துகளும் குறிப்பாக சிறு காயங்கள் ஏற்பட்டால்கூட விபத்தாக பதிவு செய்யப்படுகின்றன. இதனால்தான் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன என்று கருத்து தெரிவித்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று சாலை விபத்துகளும், அதனால் உயிரிழப்புகளும் முற்றிலும் ஏற்படாதவாறு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

SCROLL FOR NEXT