'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டம், இளைஞர்களின் எழுச்சியுடன் நாடு முழுவதும் பரவியதால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. போராட்டக்காரர்களின் அழுத்தம் தாங்கமுடியாமல் மத்திய கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். மீண்டும் 'ஜந்தர் மந்தர் 2.0' போராட்ட களமாக மாறுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு முன்பு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார் பொறுப்பேற்றது முதல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. தேர்தல் ஆணையத்தால் பீகாரில் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப்பணி, தற்போது நாடு முழுவதும் மாநில வாரியாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் வாக்காளர் பட்டியலில் இருந்து கோடிக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் உள்ள மற்ற 2 கமிஷனர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரின் நடவடிக்கைகள் தொடர்பாக 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனைகளை பதிவு செய்ததாக செய்திகள் வந்துள்ளன. வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் நடைமுறைகள், புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான விதிமுறைகள், தேர்தல் தரவுகளை கையாளும் முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் முற்றிலும் மறுக்கவில்லை.
அதேநேரத்தில், தேர்தல் கமிஷனர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானது என்றும், தேர்தல் ஆணையம் சட்டப்படியே செயல்படுகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், முக்கிய முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும்' களத்தில் இறங்கியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தப் பணியின் காரணமாகவே முன்னாள் முதல்-அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வியடைந்ததாக அந்த கட்சி கூறியுள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது என்றும், சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளதோடு, மற்றவர்களின் தோல்விக்கும் இதுபோன்ற காரணங்கள் இருப்பதாக அந்த கட்சி பட்டியலிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் 2 கமிஷனர்கள் தெரிவித்ததாக கூறப்படும் ஆட்சேபனைகளின் அடிப்படையில், இது மிகப்பெரிய முறைகேடு என்று 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' குற்றம்சாட்டியுள்ளது. இதற்காக ஞானேஷ்குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலகவேண்டும் என்றும், இல்லையென்றால் மீண்டும் ஜந்தர் மந்தர் உள்பட நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த கட்சி நேற்று முன்தினம் மாலை அறிவித்துள்ளது. ஆக, ஜந்தர் மந்தர் மீண்டும் ஒரு பெரிய போராட்ட களத்துக்கு தயாராகி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.