இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு உற்பத்திப் பெருக்கம், கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள், விவசாயம் என்று பல காரணிகள் தேவைப்பட்டாலும் வேலைவாய்ப்புகள்தான் அதில் முக்கிய இடத்தில் இருக்கிறது. ஆனால், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும், அதற்குத் தேவையான திறன் கொண்ட மனிதவளத்தை உருவாக்குவதிலும் நாம் இன்னும் பின்தங்கியிருக்கிறோம். நம் நாட்டில் 15 வயது முதல் 29 வயது வரையிலான இளைய சமுதாயத்தினர் 36.7 கோடி பேர் உள்ளனர். இது அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிகமாகும். இவ்வளவு பெரிய இளைஞர் படை இருந்தாலும், அவர்களில் கணிசமானவர்கள் தொழிலாளர் சந்தையில் இல்லை. நாட்டில் உள்ள 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களில் 54 சதவீதம் பேர் தொழிலாளர் சந்தையில் இல்லை. அதாவது, அவர்கள் வேலை செய்வதுமில்லை. வேலை தேடுவதுமில்லை. இவ்வளவு பெரிய மனிதவளம் உற்பத்திப் பணியில் பயன்படுத்தப்படாமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இழப்பாகும்.
கல்வி நிலை உயர்ந்தாலும், அதற்கேற்ப வேலைவாய்ப்புக்கான திறன் உயரவில்லை. இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 42.6 சதவீதம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். வேலை கிடைத்தவர்களிலும், அவர்களின் கல்விக்குப் பொருத்தமான வேலைகளில் இருப்பவர்கள் வெறும் 6.25 சதவீதம் பேர் மட்டுமே என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மற்றவர்கள், ஏதாவது ஒரு வேலையில் இருக்க வேண்டும் என்பதற்காக, கிடைத்த வேலையை ஏற்றுக்கொள்கிறார்களே தவிர, அது தங்களின் படிப்புக்குப் பொருத்தமான வேலையா என்பதைப் பார்ப்பதில்லை. இவ்வளவுக்கும் வேலைவாய்ப்புகள் நாட்டில் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அதற்குத் தகுதியானவர்கள். அந்த வேலைவாய்ப்புகளுக்கேற்ற திறமையானவர்கள் கிடைப்பதுதான் குதிரைக்கொம்பாக இருக்கிறது என்று தொழில் அதிபர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில் உள்ள 82 சதவீத நிறுவனங்கள் சரியான திறன் கொண்ட, அதாவது திறமையான பணியாளர்களைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமப்படுவதாக மேன் பவர் குழுமத்தின், "2026 உலகளாவிய திறன் பற்றாக்குறை” ஆய்வு தெரிவிக்கிறது. பொதுவாக, இளைஞர்கள் வேலையைத் தேடுகிறார்கள். தொழில் நிறுவனங்கள் திறமையானவர்களைத் தேடுகின்றன. இந்த இரு தரப்பினரும் ஒருவர் விருப்பத்தை மற்றவர் எதிர்பார்ப்புடன் பூர்த்தி செய்ய முடியாமல் தூரத்தில் நிற்கிறார்கள். தொழில் திறனும் கல்வியும் இணைந்தால் மட்டுமே நல்ல சம்பளத்துடன் எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவை மற்றும் வழங்கல் தத்துவத்தின்படி திறமையானவர்களின் தேவையிலும், வழங்கலிலும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக, ஓரிரு வேலைவாய்ப்புகளைக் கூறலாம். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு தொடர்பான வேலைவாய்ப்புகளைப் பொறுத்தமட்டில், இந்த ஆண்டு ஒரு லட்சம் பேர் மட்டுமே வேலைவாய்ப்புச் சந்தையில் இருக்கிறார்கள். ஆனால், தொழில் நிறுவனங்களின் தேவையோ 2 லட்சம் பேர். இதேபோல, கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் வேலைவாய்ப்புக்காக தேவைப்படும் திறன் கொண்டவர்கள் 8 லட்சம் பேர் வேலைவாய்ப்புச் சந்தையில் இருக்கிறார்கள். ஆனால், தேவையோ 20 லட்சம் பேர். ஆக மொத்தத்தில், நாட்டில் வேலைவாய்ப்புக்குப் பஞ்சம் இல்லை. அதற்கான திறன் கொண்டவர்களுக்குத்தான் பஞ்சம் இருக்கிறது. எனவே, கல்வி நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பட்டப்படிப்போடு நின்று விடாமல் திறனை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டால், தொழில் நிறுவனங்களுக்கும் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் கிடைப்பார்கள்.