புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரிலான பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. 7 மாடிகளை கொண்ட அந்த நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கடந்த மாதம் முதல்-அமைச்சர் விஜய் திறந்துவைத்தார். இந்த நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக அப்போதைய திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் 137 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் பெரிய குண்டை தூக்கிப்போட்டு இருக்கிறார்.
அதாவது, “நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளில் கூறப்பட்ட நூல்களை வாங்கவில்லை. எடுத்துக்காட்டாக. அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள 1,008 நூல்கள் அந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு ஆண்டுகளாக எழுத்தாளராக இருக்கும் எனக்கே அப்படி ஒரு பதிப்பகம் இருப்பது தெரியவில்லை. அதுமட்டுமன்றி, இந்த நூல்களை எழுதிய திரிஷா விஜய், தாமரை பன்னீர், தாமரை கார்த்தி, விஜய பாலு, மோனிக்கா ரவி, கீர்த்தி கோவிந்த் ஆகியோரெல்லாம் யாரென்றே தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது நூல் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடைபெற்று இருப்பது உறுதி. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்து இருப்பதுபோல தெரிகிறது" என்று அவர் பகிரங்கமாக தெரிவித்தார். ஏ.ஐ. மூலம் பல நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியவுடன் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. உடனடியாக தமிழக அரசும், லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரணையை தொடங்கியது. தி.மு.க., த.வெ.க. அரசு மீதும், த.வெ.க. அரசு தி.மு.க. மீதும் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றன.
பெரியார் அறிவுலகம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வாங்கப்பட்டுள்ள புத்தகங்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுவரை அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்கள் வெளியிட்ட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே தமிழக அரசின் பொது நூலகத்துறை வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கையை வகுத்து வெளியிட்டிருக்கிறது. அந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நூலகங்களில் புத்தகங்கள் வாங்குவது தொடர்பான வழக்கை விசாரிக்கும்போது. எவ்வாறு கொள்முதல் நடைபெறவேண்டும் என்பதற்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர். புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
நீதிமன்றத்தின் இந்த எச்சரிக்கையெல்லாம் புறக்கணிக்கப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளன. நூலகங்களுக்கு செல்வதே அறிவை விசாலமாக்குவதற்குத்தான். ஆனால், அதற்கேற்ற தரமான புத்தகங்கள் இல்லாமல், அறிவை மழுங்க செய்யும் புத்தகங்களை வாங்கியிருந்தால், அது ஏற்புடையது இல்லை. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டும் பெரியார் நூலகம் தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்து விசாரணையை தொடங்கவும், அகல் விளக்கு பதிப்பகம். அதன் உரிமையாளர் மோகன் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டது. அதன்பேரில் மோகன் மீது வழக்குப்பதிந்து, கைது செய்துள்ளனர். இந்த முறைகேடு விவகாரத்தில் 5 அதிகாரிகளை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சந்தேகத்துக்குரிய புத்தகங்களை பட்டியலிட்டு அவை வாசகர்களுக்கு கிடைக்காதவகையில் ஒதுக்கி வைக்கும் பணிகளும் நடந்துவருகிறது. எண்ணற்ற தகவல்களை அச்சு வடிவில் பொறித்து வைத்திருந்தாலும், அமைதியாக இருந்து சிந்தனை சிறகை விரித்து அறிவை வளர்க்கும் நூலகங்கள், ஊழலுக்கு இடம் கொடுக்கும் இடங்களாக மாறிவிடக்கூடாது என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது.