மத்திய அரசு 1986-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை வகுத்தது. அதன் ஒரு பகுதியாக, கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், அதிலும் குறிப்பாக ஏழை மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா உண்டு உறைவிடப் பள்ளி தொடங்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது, வெறும் பள்ளிகள் மட்டுமல்லாமல், அங்கேயே மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில் விடுதி வசதியுடனும் இவை இயங்கும். இதற்காக மாநில அரசு இடம் கொடுத்தால் மட்டும் போதும். மத்திய அரசே அதற்கான கட்டிடங்களைக் கட்டி, பள்ளியையும் நடத்தும். இந்தப் பள்ளிகள் ஜவகர் நவோதயா பள்ளிகள் என்ற பெயரில் செயல்படும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை நடத்தப்படும் இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
உணவு, தங்கும் விடுதி, சீருடை, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாகவே வழங்கப்படும். மாணவர் சேர்க்கையில் 75 சதவீத மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்த இடங்களில் 33 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கப்படும். மாணவர்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.600 பெறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, உடனடியாக இந்தப் பள்ளிகளுக்காக நிலம் வழங்கி, பள்ளிகளைத் திறந்துவிட்டன. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் 31, கேரளாவில் 14, ஆந்திராவில் 15, தெலுங்கானாவில் 9, புதுச்சேரியில் 4 நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் 76, மத்தியபிரதேசத்தில் 54 நவோதயா பள்ளிகள் உள்ளன. பல உயர்கல்வி நிறுவனங்களில் நவோதயா பள்ளிகளில் படித்த மாணவர்களே அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் பள்ளிகள் இருமொழிக் கொள்கையை காரணம் காட்டி தொடங்கப்படவில்லை. இதற்கெல்லாம் இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் மாநில மொழிதான் முதல் மொழியாகவும், இரண்டாவது மொழி ஆங்கிலமாகவும், 3-வது மொழி இந்தியாகவும் இருக்கும். தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படாமல் இல்லை. நமது மாநிலத்தில் 1,562 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும், 46 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் இயங்குகின்றன. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மட்டும் 15 லட்சத்து 88 ஆயிரத்து 193 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். கேந்திரிய வித்யாலயாவில் சுமார் 67 ஆயிரம் பேர் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மூன்று மொழிகளையும் படிக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், இந்தி பிரசார சபா நடத்தும் இந்தி மொழி தேர்வுகளை ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதுகிறார்கள். ஆக, அரசு பள்ளிகளில் மட்டுமே இருமொழிக் கொள்கை என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்தி கற்றுக்கொடுக்கப்படுவதில்லையே தவிர, வசதியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இந்தி படிக்கத்தான் செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை தொடங்கவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நவோதயா பள்ளிகளுக்கு இடம் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு 3 மாதங்கள் கெடு விதித்துள்ளது. ஆக, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பது, இன்னும் 3 மாதங்களுக்குள் தெரிந்துவிடும். நவோதயா பள்ளிக்கு தமிழகத்தில் அனுமதி உண்டா? இல்லை, கதவுகள் திறக்கப்படாமல் மூடியேதான் இருக்குமா? என்பது மாணவர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.