ஒவ்வொரு குடும்பத்துக்கும் மிகவும் அத்தியாவசியமானது கியாஸ் சிலிண்டரும், ரேஷன் கார்டும்தான். கியாஸ் சிலிண்டர் இல்லையென்றால் சமையல் செய்ய முடியாது. ரேஷன் கார்டு இல்லையென்றால் சமையலுக்கான பொருட்கள் கிடைக்காது. அதனால்தான் புதுமண தம்பதிகள் தங்கள் இல்வாழ்க்கையை தொடங்கும்போது கியாஸ் சிலிண்டருக்கும். ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பம் செய்கிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடும்பங்கள் அதிகரித்துவிட்டன. இப்போது பல விண்ணப்பங்களுக்கு ரேஷன் கார்டு நகல் வைக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு குடும்பத்துக்கு குறிப்பாக, புதிதாக திருமணம் செய்த தம்பதிகளுக்கு முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை மூடியது.
இதனால் இந்தியாவுக்கு வரவேண்டிய கச்சா எண்ணெய், கியாஸ் சிலிண்டர் சப்ளை முற்றிலுமாக தடைபட்டது. கியாஸ் சிலிண்டர் போதிய அளவு கையிருப்பில் இல்லாததால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் விலையும் கணிசமாக உயர்ந்தது. ஒரு சிலிண்டர் வாங்கி 25 நாட்களுக்கு பிறகுதான் மீண்டும் பெறுவதற்கு பதிவு செய்யமுடிந்தது. அதற்கு பிறகும் சப்ளைக்கு பல நாட்கள் காத்திருக்கவேண்டியது இருந்தது. அதுபோல கிராமப்புறங்களில் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளி 45 நாட்களாக இருந்தது. இதுமட்டுமல்லாமல் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்ட பல தொழில்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. ஓட்டல்களில் விறகு அடுப்பை பயன்படுத்தி உணவு பொருட்களை சமைத்ததால், அதன் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதற்கிடையே மார்ச் 2-வது வாரத்தில் இருந்து இன்று வரை புதிய கியாஸ் சிலிண்டர்களுக்கான இணைப்புகள் வழங்கப்படவில்லை.
புதிய ரேஷன் கார்டு பெற கியாஸ் இணைப்பு ரசீதையும் கேட்பதால் புதுமண தம்பதிகள் ரேஷன் கார்டும் பெறமுடியாத நிலை உள்ளது. இல்வாழ்க்கையை தொடங்கியவர்களுக்கு ரேஷன் கார்டும் இல்லை, கியாஸ் இணைப்பும் இல்லை என்பது அந்த சேவைகளில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பல சேவைகளுக்கும் பெரிய தடையாக இருக்கிறது. ஓரளவு வசதி படைத்தவர்கள் கூடுதல் விலை கொடுத்து கள்ளச் சந்தையிலோ, மானியம் இல்லாத 10 கிலோ அல்லது 5 கிலோ சிலிண்டர்களையோ வாங்கிக்கொள்கிறார்கள். அதுபோல ரேஷன் கடையில் வினியோகம் செய்யப்படும் அரிசி மற்றும் இதர பொருட்கள் இல்லையென்றாலும் வெளிச்சந்தையில் அதாவது கடைகளில் கூடுதல் தொகை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள்.
ஆனால் ஏழைகளுக்கு ரேஷன் கடையில் கிடைக்கும் இலவச அரிசியும், மலிவு விலையில் கொடுக்கப்படும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவையும்தான் குடும்ப செலவுகளை பெருமளவில் குறைக்கும் என்பதால் இவை இரண்டும் இல்லாமல் வாழ்க்கை சக்கரம் நகருவது பெரிய தடையாக இருக்கிறது. புதிய கியாஸ் சிலிண்டர்களுக்கான விண்ணப்பங்கள் மலை போல குவிந்துக்கொண்டிருக்கின்றன. நிலைமை சீரடைந்து அனைவருக்கும் கியாஸ் சிலிண்டர்கள் வழங்க இன்னும் பல மாதங்கள் காத்திருக்கவேண்டிய சூழல் உள்ளது. கியாஸ் சிலிண்டர்களை வாங்கி அந்த ரசீதைக் காட்டியபிறகே ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பிக்க முடியும் என்பதால் அதற்கும் தாமதமாகிறது. ஏற்கனவே இந்த சிக்கல் 6 மாதங்களுக்கும் மேல் நீடிக்கிறது. எனவே மத்திய அரசு உடனடியாக நிலைமையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.