தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்பட மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போவதால் குடும்பங்களின் அன்றாட மற்றும் மாதாந்திர செலவுகள் உயர்ந்து கொண்டே போகின்றன. இதனால் ஏற்படும் வலி அனைத்து குடும்பங்களிலும் அதிகமாக இருக்கிறது. பல குடும்பங்களில் எந்தக் காய்கறி விலை குறைவாக இருக்கிறது என்று பார்த்து அந்தக் காய்கறிகளையே சமையலுக்கு வாங்குகிறார்கள்.
ஆனால் எதைக் குறைத்தாலும் வெங்காய பயன்பாட்டை குறைக்கவே முடியாது. ஏனெனில் எந்தக் கூட்டு வைத்தாலும், எந்த குழம்பு வைத்தாலும் வெங்காயம் இல்லாமல் அதன் சுவையை கூட்ட முடியாது. ஆக சமையலறையில் கண்டிப்பாக இருக்கவேண்டிய அத்தியாவசிய பொருள் வெங்காயம்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவது அதனை உரிக்காமலேயே இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைப்பதாக இருக்கிறது.
தமிழக சட்டசபையிலும் விலைவாசி உயர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் எதிர்க்கட்சி சார்பில் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் மிக விரிவாக விலைவாசி உயர்வு குறித்து பேசினார்கள். இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், "பெட்ரோல்-டீசல் விலை உயர்வதாலேயே அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. விலை கண்காணிப்பு குழு மூலமாக தினமும் 41 பொருட்களின் விலையை கண்காணிக்கிறோம். வெங்காயத்தையும் தட்டுப்பாடு இல்லாமல் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று பேசினார்.
இந்த நிலையில், இந்தியாவின் வெங்காய தலைநகரான மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து 24 ரெயில் பெட்டிகளில் பெரிய வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு 'காந்தா எக்ஸ்பிரஸ்' (வெங்காய எக்ஸ்பிரஸ்) சரக்கு ரெயில் சென்னைக்கு வந்தது. இதில் 840 டன் வெங்காயம் இருந்தது. மத்திய அரசின் 'நாபெட்' என்று சொல்லப்படும் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பும் நாசிக்கில் இருந்து 1.21 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்துள்ளன.
இதில் கணிசமான ஒரு பகுதியை டெல்லிக்கு முதல் ரெயிலில் அனுப்பி, அங்கு வெங்காயம் கிலோ ரூ.35-க்கு கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. இரண்டாவது ரெயிலான வெங்காய எக்ஸ்பிரஸ் சரக்கு ரெயில்தான் 840 டன் பெரிய வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து லாரிகளில் 21 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நகர்ப்புற பகுதிகளில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக கிலோ ரூ.35 என்ற மானியவிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் வெங்காயம் விற்கப்படும் என்றும், இதற்காக அரசு 1,000 டன் வெங்காயம் கொள்முதல் செய்திருக்கிறது என்றும் சட்டசபையில் அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்திருக்கிறார்.
வெளி மார்க்கெட்டில் வெங்காயம் கிலோ ரூ.70 வரையிலும் விற்பனையாகிறது. தமிழகத்தின் பெரிய வெங்காய தேவையில் 90 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்துதான் கொண்டுவரப்படுகிறது.கடந்த முறை வெங்காய விலை கணிசமாக உயர்ந்தபோது டெல்லிக்கு நாசிக்கில் இருந்து வெங்காய எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றதுபோல தமிழ்நாட்டுக்கும் வரவேண்டும் என்று 'தினத்தந்தி' தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது. சென்னைக்கு வந்ததுபோன்று மதுரைக்கும் வெங்காய எக்ஸ்பிரஸ் விரைவில் வர உள்ளது. வெங்காயத்தைப்போல மற்ற காய்கறிகளும் அதிக விளைச்சல் உள்ள பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டால் அவற்றின் விலையும் கணிசமாக குறையும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது.