தலையங்கம்

150 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்

கூடுதல் 25 நாட்கள் வேலைவாய்ப்புக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

"ஒரு மனிதனுக்கு ஒரு மீனை கொடுத்தால் அன்று மட்டும் அவனை சாப்பிட வைத்து பசியாற செய்துவிடுவீர்கள். ஆனால் அதற்கு பதிலாக மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தீர்கள் என்றால், அவனுக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் உணவளித்துவிடுவீர்கள்" என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

தமிழக அரசு

இது ஒருபக்கம் தேவைப்படுபவர்களுக்கு செய்யும் உதவி என்றாலும், அதை அவர்கள் கையேந்தி வாங்காமல் தன்னம்பிக்கையுடன் உழைத்து சம்பாதிக்க காட்டும் வழியாகும். இதைத்தான் இப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்திருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டியது அரசின் கடமைதான். ஆனால் அதை உதவியாக செய்யாமல், அவர்களே உழைத்து சம்பாதித்துக்கொள்ள நல்ல வழி இப்போது காட்டப்பட்டுள்ளது.

125 நாட்கள் வேலை திட்டம்

2004-ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தார். விவசாய வேலை இல்லாத நேரங்களில் இந்த 100 நாட்கள் வேலை திட்டம் கிராம மக்களுக்கு கைகொடுத்தது. இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்கள் வேலை திட்டமாக மாற்றியுள்ளது.

வெற்றி 150

இந்த நிலையில் தமிழக அரசு மேலும் ஒருபடி சென்று, கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 'வெற்றி 150' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி 125 நாட்கள் வேலைவாய்ப்பை நிறைவு செய்த குடும்பங்களுக்கு மேலும் 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டு, ஆண்டுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்த கூடுதல் 25 நாட்கள் வேலைவாய்ப்புக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

4 மணி நேரம்

இதன்மூலம் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கிடைக்கும் 125 நாட்கள் வேலைவாய்ப்போடு, தமிழக அரசின் முயற்சியால் மேலும் 25 நாட்கள் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சலுகை வழங்கியுள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்கும் இடங்களிலேயே 8 மணி நேரம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

ஆனால் அவர்கள் மற்ற தொழிலாளர்கள் செய்யும் வேலைக்கு ஈடாக செய்யவேண்டியதில்லை. ஆனால் தற்போது தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்கும் இடத்தில் 4 மணி நேரம் இருந்தால் போதும். அவர்களுக்கு மிக எளிதான வேலையே கொடுக்கப்படும். எடுத்துக்காட்டாக புதர்களை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற எளிதான வேலையே வழங்கப்படும்.

1.38 லட்சம் மாற்றுத்திறனாளிகள்

மற்றவர்கள் செய்யும் வேலையில் 50 சதவீத வேலையே அவர்கள் செய்யவேண்டும் என்றாலும் அவர்களுக்கு முழு சம்பளமான ரூ.336 கொடுக்கப்படும். தமிழ்நாட்டில் இப்போது இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற 1.38 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்க விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு 15 நாட்களுக்குள் பணி அட்டை வழங்கப்படவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம் தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கும் நாம் யாரையும் சார்ந்து இருக்கவேண்டியது இல்லை. உழைத்து சம்பாதிக்கிறோம் என்ற கவுரவத்தையும், பெருமையையும் இந்த உத்தரவு வழங்கியுள்ளது.

SCROLL FOR NEXT