சென்னை,
தமிழக தேர்தலில் த.வெ.க. வெற்றிக்குப் பிறகு அரசியல் கட்சிகளின் பார்வை 'ஜென் சி' இளைஞர்களின் பக்கம் திரும்பியது. 'ஜென் சி' அதாவது 1997-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் போட்ட ஓட்டுதான் த.வெ.க. வெற்றிக்கு அடிப்படை என்றாலும், ஓட்டுப்போடும் வயதை அடையாத 2013 முதல் 2025 வரை பிறந்த 'ஜென் ஆல்பா' தலைமுறையினர், தங்கள் பெற்றோரையும். குடும்பத்தினரையும் ஓட்டுப்போட வைத்த பிரசாரப் பணியும்தான் த.வெ.க.வின் வெற்றிக்கு வித்திட்டது. இதுவே அனைத்து அரசியல் கட்சியினரின் மனதிலும் நிழலாடிக்கொண்டு இருந்த நிலையில், கடந்த மே மாதம் இணையதளம் மூலம் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் மத்திய அரசாங்கத்தையே அதிர வைத்ததோடு மட்டுமல்லாமல், கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதானையே ராஜினாமா செய்ய வைத்துவிட்டது.
இந்த சம்பவம் அரசியல் கட்சிகளுக்கு பொது மேடை என்பதைத் தாண்டி, தங்கள் பிரசாரங்கள், கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் தளம் சமூக வலைதளம் என்பதை உணர வைத்துவிட்டது. மேலும் தங்களின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான், அதுவும் 'ஜென் சி' இளைஞர்கள் ஆதரவில்தான் இருக்கிறது என்பதை அவர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்துவிட்டது. இதனால் அரசியல் கட்சியினர் தங்களுடைய பாதையை 'ஜென் சி' இளைஞர்களை நோக்கி திருப்பியிருக்கிறார்கள். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியை விட சமூகவலைதளங்களில் அதிகம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதாவில் பிரத்யேகமாக 'ஜென் சி' உயர்மட்ட குழுவை நிதின் நபின், ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டே ஆகியோரை உள்ளடக்கி அமைத்துள்ளார்.
அதுபோல பா.ஜனதா தலைவர்கள் சமூக வலைதளங்களில் வெறும் பதிவுகள் போடுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் இருவழி தகவல்தொடர்பையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதோடு 'ஒரு மத்திய மந்திரி - ஒரு பல்கலைக்கழகம்' என்ற திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தியும், 'மாணவர்களின் குரல், மாணவர்களின் எதிரொலி' என்ற பெயரில் பிரசாரத்தை முன்னெடுத்து 'ஜென் சி' தலைமுறையை சேர்ந்த மாணவர்களை சந்தித்து உரையாடி வருகிறார். அவர்களை கவரும் வகையில் அடிக்கடி உற்சாகமாக பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல், அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆதரவு குரலை எழுப்பி வருகிறார். தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கட்சியில் இளம் ரத்தத்தை பாய்ச்சுவதற்காக அதிக முயற்சி எடுத்து வருகிறார்.
இதற்காக தி.மு.க.வில் இதுவரை இல்லாத வகையில் கிளை, வட்டம், பகுதி, மாவட்ட அமைப்புகளின் தலைவர்களுக்கு வயது நிர்ணயம் செய்ததோடு மட்டுமல்லாமல், பதவிக்கான கால வரம்பையும் நிர்ணயித்துள்ளார். இதன்மூலம் இளைஞர்களுக்கு பெருமளவில் கட்சி பதவிகள் கிடைக்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் 'ஜென் சி' இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க கவர்ச்சிகரமான திட்டங்களை தீட்டி வருகிறார்கள். 'ஜென் சி'யின் மனதில் இடம் பிடிப்பதே 'எமர்ஜென்சி' என அவர்கள் புரிந்து கொண்டு விட்டனர். ஏனென்றால் 'ஜென் சி' மற்றும் இளைய தலைமுறையினருக்கு 39 சதவீத வாக்குகள் இருக்கின்றன. ஆக அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் 'ஜென் சி'யின் ஆதிக்கம்தான் கொடிகட்டி பறக்கப்போகிறது.