தலையங்கம்

இன்ஸ்டாகிராமில் பணிகளை தொடங்கிய பிரதமர்

மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.

புதுடெல்லி,

இந்த ஆண்டு நீட் தேர்வு வினாக்கள் கசிந்ததால், அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரியாக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் குதித்தது. இதற்கு பொதுமக்களிடம் ஆதரவு பெருகி வந்ததால் மத்திய அரசாங்கம் வேறு வழியில்லாமல் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்தது. இந்தியாவிலேயே மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், மத்திய மந்திரி ராஜினாமா செய்தது இதுவே முதல் முறையாகும். இந்த போராட்டம் இவ்வளவு வலுப்பெற்றதற்கு காரணம் சமூக வலைதளங்கள்தான் என்பதை உணர்ந்த மத்திய அரசாங்கம் அதே வழியில் போனால்தான் மக்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளது.

அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மந்திரிகளும், பா.ஜனதாவினரும் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துக்கொண்டு மக்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரே இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவில் தோன்றி போராட்டம் நடத்திக் கொண்டு இருந்த இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் செய்தியை பகிர்ந்தார். அந்த வீடியோவில் இளைஞர் படைக்கு சில உறுதிமொழிகளையும் அளித்தார். பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தால் அதை விசாரித்து உச்சபட்ச தண்டனை அளிக்கும் வகையிலான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையும் அறிவித்தார்.

இந்த முதல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் அவர் நள்ளிரவில் வெளியிட்டிருந்தாலும், அதை நாடு முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பார்த்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இதன் விளைவாக உடனடியாக நன்றி தெரிவித்து அடுத்து ஒரு வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில், 'ஜென் சி' இளைஞர்களை மாணவர்களே என்று குறிப்பிடாமல் நண்பர்களே என்று அழைத்து அவர்கள் உடனான தனது நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டு இருந்தார். சூட்டோடு சூடாக 3-வது வீடியோவையும் அவர் வெளியிட்டார். அந்த வீடியோவில் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரிவான விசாரணை மற்றும் தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பையும் வெளியிட்டார்.

நமது தேர்வு முறை முழுமையான நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அது வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும். மேலும் தேர்வு முறைகளில் அதிகளவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறிவிட்டு, தேர்வு முறையில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டு வர அனைத்து குடிமக்களுக்கும் தனித்துவமான ஆதார் எண்ணை வழங்கிய ஒருங்கிணைந்த தனித்துவ அடையாள ஆணையம் (உடாய்) அமைப்பின் தலைவராக பணியாற்றிய நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில்தான் வரவிருக்கும் அனைத்து தேர்வுகளின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அளித்தது இனி வரும் தேர்வுகள் மீது அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இதுவரை பிரதமர் மோடியின் அறிக்கைகளை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பார்த்து வந்த ஊடகங்கள் இப்போது இன்ஸ்டாகிராமை பார்க்கவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. இன்ஸ்டாகிராம் என்பது ஒரு அமெரிக்க நிறுவனம். அவர்களால் ஒரு பதிவை தடுக்கவும் முடியும், நீக்கவும் முடியும் என்பதுதான் நெருடலாக இருக்கிறது.